உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் 43 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா டக் அவுட்டாகியும் வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லபுசேனே 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – ட்ராவிஸ் ஹெட் அபாரமாக ஆடினர்.


ஸ்டீவ் ஸ்மித் சதம்


நேற்றே ட்ராவிஸ் ஹெட் சதமடித்த நிலையில் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்றும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் சதத்தை பதிவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் – ட்ராவிஸ் ஹெட் ஆகிய இருவரின் வலுவான சதத்தால் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.


டெஸ்ட் போட்டிகள் என்றாலே உலகளவில் நம்பர் 1 வீரராக உலா வரும் ஸ்டீவ் ஸ்மித் எந்த நாட்டு மண் என்றாலும் ஆதிக்கம் செலுத்தும் வீரராக உலா வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித் அடிக்கும் 31வது சதம் இதுவாகும்.


ஹைடனுக்கு பின்னுக்குத் தள்ளி சாதனை:


இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் மேத்யூ ஹைடனை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார். மேத்யூ ஹைடன் 30 டெஸ்ட் சதங்கள் விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ரிக்கி பாண்டிங் தன்வசம் வைத்துள்ளார். அவர் 168 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 41 சதங்கள் விளாசியுள்ளார். 2வது இடத்தில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் 32 சதங்களுடன் உள்ளார்.


ஸ்டீவ் ஸ்மித் 97வது டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8895 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது அவர் ஆடி வருவது 97வது டெஸ்ட் ஆகும். இதில் 31 சதங்களும், 4 இரட்டை சதங்களும், 37 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 239 ரன்கள் எடுத்துள்ளார். 22 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 34 வயதே ஆன ஸ்டீவ் ஸ்மித் இன்னும் ஒரு சதம் விளாசினால் ஸ்டீவ் வாக் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை பெறுவார். இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்டீவ் ஸ்மித் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் சதம் விளாசியதால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் பால் டேம்பரிங் விவகாரத்திற்கு பிறகு தடை விதிக்கப்பட்ட பிறகும் சிறப்பான கம்பேக் அளித்து டெஸ்ட் போட்டிகளில் தான் எப்போதும் நம்பர் 1 வீரர் என்று நிரூபித்து வருகிறார். ஸ்மித் டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 142 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 சதங்கள், 29 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 939 ரன்கள் எடுத்துள்ளார்.


மேலும் படிக்க: Rohit WTC Final: என்ன செஞ்சு இருக்கிங்க ரோகித் சர்மா? ரவுண்டு கட்டி விளாசும் மூத்த வீரர்கள்.. நடந்தது என்ன?


மேலும் படிக்க: Viral Photo: ’என் கேப்டன் எப்போதும் கோலிதான்..’ ரோஹித் சர்மாவை பெவிலியனில் வெறுப்பேற்றிய ரசிகர்..!