உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மூத்த வீரர்கள் பலரும் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா:


இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டுள்ளது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 76 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், ஸ்மித் மற்றும் டிராவிஸ்  ஹெட் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. இதனால், முதல் நாள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்களை குவித்துள்ளது. ஸ்மித் 95 ரன்களையும், ஹெட் 146 ரன்களையும் குவித்து களத்தில் உள்ளனர்.


சொதப்பினாரா ரோகித்?


தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தொடர்ந்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணி தவறிவிட்டது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்யாததும், பல இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படாததும் தவறு எனவும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு, பீல்டிங்கின் போது ரோகித் சர்மா கோபப்பட்டு ஒரு வீரரை திட்டுவது போன்ற வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு, இந்திய அணி செயல்பாடு தொடர்பாக பல மூத்த வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


”ரன் அடிக்க விட்ட ரோகித்”


இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், "டிராவிஸ் ஹெட் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்பது அழுத்தமான சூழல் தான். ஆனாலும், டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். இதற்கான வாய்ப்பை தனது பீல்டிங் அமைப்பின் மூலம் ரோகித் சர்மா உருவாக்கி கொடுத்துவிட்டார். அவரை எளிதாக ரன்களை அடிக்க இந்திய அணி வாய்ப்பை உருவாக்கி கொடுத்து விட்டது" என தெரிவித்துள்ளார்.


அஸ்வின் ஏன் இல்லை? - கவாஸ்கர்


போட்டியின் முதல்நாள் முடிவில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டை, முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதன்படி "ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுக்காததன் மூலம் இந்தியா தனது தந்திரத்தை தவறவிட்டுள்ளது.  நீங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறீர்கள், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலரை நீங்கள் தேர்வு செய்யவில்லை. இந்திய அணியின் இந்த முடிவு எனக்கு புரியவில்லை. உமேஷ் யாதவுக்குப் பதிலாக அவரை நான் தேர்ந்தெடுத்திருப்பேன். ஆஸ்திரேலிய அணியில் 4 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக செயல்பட்ட வரலாறு உண்டு. ஆனால், இந்திய அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் கூட இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.