WTC Final 2023: ஐசிசி தரப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.  லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 76 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், கைகோர்த்த ஸ்மித்  மற்றும் ஹெட் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக மீட்டனர்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில்  146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில்  95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 


ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் விளாசிய சதம் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளாசப்பட்ட முதல் சதமாக பதிவானது. இதன் பின்னர் இரண்டாவது நாள் தொடக்கத்தில் தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி தனது சதத்தினை எட்டினார் ஸ்டீவ் ஸ்மித். இதனால் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டாவதாக சதம் விளாசியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இது இவரது 31வது சதமாகும். 


ஐசிசி நடத்தும் தொடர்களின் இறுதிப் போட்டியில் ஒரு அணியில் ஒருவர் சதம் அடிப்பதே உலக சாதனையாக பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இருவர் அதாவது டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து சதம் விளாசியிருப்பது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.


இதற்கு முன்னர்,  1975ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாய்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக  102 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர், 1979ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரிச்சர்ட்ஸ் 138 ரன்கள் விளாசினார். 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 107 ரன்கள் சேர்த்தார். 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் இந்தியாவுக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 140 ரன்கள் எடுத்திருந்தார். 2007ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் கில்கிரிஸ்ட் இலங்கைக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 149 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் ஜெயவர்தனே இந்தியாவுக்கு எதிராக தனது விக்கெட்டை இழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.