WTC Final 2023: ஐசிசி உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.
ஐசிசி தரப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 76 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், கைகோர்த்த ஸ்மித் மற்றும் ஹெட் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக மீட்டனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில் 146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளின் தொடக்கத்திலேயே ஸ்மித் தனது சதத்தினை எட்ட, இக்கட்டான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை மீட்ட இருவரும் சதம் விளாசி இந்திய அணிக்கு சவால் அளித்தனர். 150 ரன்களை அதிரடியாக கடந்த டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை 163 ரன்களை எட்டிய போது முகமது சிராஜ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த கிரீன் 6 ரன்னில் வெளியேற, இந்தியாவின் கரம் சற்று ஓங்குவதாக தெரிந்தது. அதன் பின்னர் ஸ்மித் விக்கெட்டை ஷ்ர்துல் தாக்கூர் கைப்பற்ற, போட்டி இந்தியா பக்கம் வந்ததாக தெரிந்தது. ஆனால் கேரி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணி 450 ரன்களை கடக்க உதவினார். 48 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேற, இறுதியில் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
இந்தியா சார்பில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினர். ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார். மாற்று வீரராக ஃபீல்டிங் செய்ய வந்த அக்ஷர் பட்டேல் ரன் அவுட் முறையில் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.