உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலககோப்பை தொடரின் பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்றிற்கு முன்னேறுவதற்காக நடைபெற்று வந்த முதன்மை சுற்றில் இன்று கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து அணி மோதியது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை அயர்லாந்து அணி 17.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே ஸ்காட்லாந்து அணியுடன் தோல்வியைத் தழுவிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடைந்த இரண்டாவது தோல்வி என்பதால் வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
ஹோபர்ட் நகரில் உளள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மேயர்ஸ் 1 ரன்னில் இருந்தபோது, மெக்கர்த்தி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிய சார்லசும் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடி வீரர் லீவிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தாார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பிரண்டன் கிங் மட்டும் பொறுப்புடன் ஆடினார். ஆனால், அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளிக்க எந்த வீரரும் இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. கேப்டன் நிகோலஸ் பூரண் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் ரோவ்மென் பாவெலும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய பிரண்டன்கிங் அரைசதம் விளாசினார்.
20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 48 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்தார். ஓடீன் ஸ்மித் 19 ரன்கள் எடுத்தார். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து மிகவும் எந்தவித பதட்டமின்றி ஆடினர். கேப்டன் பால்ப்ரைன் அதிரடியாக ஆடினர். அவர் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 73 ரன்களை எட்டியபோது அவுட்டனார். அவருக்கு அடுத்து ஜோடி பால் ஸ்டிர்லிங் – டக்கர் ஜோடி மிகவும் சிறப்பாக ஆடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்காத இந்த ஜோடியின் அபார ஆட்டத்தால் அயர்லாந்து அணி 17.3 ஓவர்களில் 150 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலககோப்பைத் தொடரின் பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் தகுதியை இழந்துள்ளது.
டி20 உலககோப்பையை இரு முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதன்முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : T20 World Cup 2022: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அதிக முறை வீழ்த்திய அணிகள் எவை தெரியுமா?- முழு விவரம் ..
மேலும் படிக்க : T20 World Cup 2022: கோலி டூ வார்னர்- டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை அரைசதம் கடந்து அசத்திய வீரர்கள் .. !