டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடர் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறும். சூப்பர் 12 சுற்றில் இந்தியா அணி வரும் ஞாயிற்று கிழமை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்நிலையில் 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளனர். அவற்றில் 5 முறை இந்திய அணியும் ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக 2007ஆம் ஆண்டு இந்திய அணி பவுல் அவுட் முறையில் பாகிஸ்தான் அணியை குரூப் சுற்றுப் போட்டியில் வீழ்த்தி அசத்தியது. பங்களாதேஷ்,அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தோல்வியையே சந்தித்ததில்லை.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை அதிக முறை தோற்கடித்த அணிகள் யார் யார்?
நியூசிலாந்து:
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 3 முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியாவை வென்றது. அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 79 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து மகத்தான வெற்றியை பெற்றது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் 31ஆம் தேதி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
வெஸ்ட் இண்டீஸ்:
டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ் அணி தான். வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. அதற்கு பின்னர் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் இரண்டாவது முறையாக கோப்பையையும் வென்றது. அந்த அணி இந்தியாவை 3 முறை தோற்கடித்துள்ளது.
இலங்கை:
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இலங்கை அணியும் 2 முறை வீழ்த்தியுள்ளது. அதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்து முதல் முறையாக டி20 உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 பிரிவில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. அதில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.