இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து மீண்டு வருகிறேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. இவர் அணியில் இடம்பெறாத குறையை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பூர்த்தி செய்து வருகிறார்.


டி20 உலகக் கோப்பை தொடரில் டி20 தரவரிசைப் பட்டியலைப் பொறுத்து ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.


முன்னதாக, பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. நேற்று நடைபெற இருந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்க இந்திய அணி தயாராக இருந்தது. எனினும், மழை காரணமாக அந்த ஆட்டம் ரத்தானது.


"சூப்பர் 12 குரூப் 2" பிரிவில் இடம்பெற்றுள்ள பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 23ம் தேதி மோதவுள்ளன. டி20 உலகக் கோப்பையை கடைசியாக 2007ம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன்பிறகு இதுவரை இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் ரவீந்திர ஜடேஜா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாகும்.


எனினும், இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. ஜடேஜா எப்படி இருக்கிறார்? அவர் காயத்திலிருந்து மீண்டு விட்டாரா? என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா, தான் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பதிவேற்றி, "நான் திரும்பி வருவேன்" என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.


அந்த வீடியோ சில விநாடிகளே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கம் ஓடி பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. வீடியோவின் பின்னணியில் தமிழ் பாடலின் (சிஎஸ்கேவின் தவிர்க்க முடியாத வீரராயிற்றே!) வரிகளையும் கேட்க முடிகிறது. 


ரசிகர் ஒருவர், "எனக்கு மட்டும்தான் தமிழ் பாட்டு கேட்குதா" என்று கமென்ட் செய்துள்ளார். மற்றொரு ரசிகர், "நீங்கள் இல்லாமல் இந்திய அணி 20 பந்துகளில் 50 ரன்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அதை எவ்வாறு கையாளும் என்பதை எப்படி பார்ப்பது எப்படி என்று தெரியவில்லை? நீங்கள் அணியில் இல்லாதது வருத்தமே" என்று குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, கடந்த மாதம் தன்னுடைய அறுவை சிகிச்சை தொடர்பான பதிவை ஜடேஜா வெளியிட்டிருந்தார்.  இதுதொடர்பான பதிவுகளையும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார். ரவீந்திர ஜடேஜாவுடன் இருக்கும்போது இந்திய வீரர் ஷிகர் தவான் நடனமாடும் வீடியோ ஒன்றும் சமீபத்தில் வைரலானது. ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.