கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 


இதனிடையே, ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த பட்டியலில் 836  புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் சுப்மன் கில் 818 புள்ளிகளுடன் இருக்கிறார்.


கோலியை பின்னுக்குத்தள்ளிய ஹிட்மேன் ரோகித்:


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார்.


அந்த வகையில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். அந்த போட்டியில் 84 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 131 ரன்கள் குவித்தார்.


அதேபோல், பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 63 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என மொத்தம் 86 ரன்கள் குவித்தார்.


இவ்வாறு கடந்த இரண்டு போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் இரண்டு  போட்டிகளில் 217 ரன்கள் எடுத்துள்ளார். 72  சராசரி மற்றும் 141.83 ஸ்ட்ரைக்-ரேட் வைத்துள்ளார்.


அதன்படி, 711 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ரோகித் சர்மா 719 புள்ளிகளுடன் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


சதம் அடித்த முதல் கேப்டன்:


இந்த உலகக் கோப்பை தொடரில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார்.


அதேபோல் அதிவேக சதம் ( 63 பந்துகளில்)  மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் (555) அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். மேலும் ஒரு நாள் உலகக் கோப்பைகளில் (7) அதிக சதங்கள் அடித்தவர் என்ற தரவரிசைப்பட்டியலிலும் முன்னணியில் இருக்கிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா.


ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் ஹிட்மேன்:


மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நாளை (அக்டோபர் 19) வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. முன்னதாக இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா.


இதனிடையே, கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 137 ரன்கள் அடித்தார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 104 ரன்கள் அடித்தார். இந்த சூழலில் தான் நாளை நடைபெற உள்ள போட்டியில் ரோகித் சர்மா வங்கதேச அணிக்கு எதிராக தன்னுடைய ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க: NZ vs AFG Score LIVE: பந்து வீச்சில் மிரட்டிவிட்ட ஹஷ்மதுல்லா; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவில் நியூசிலாந்து


மேலும் படிக்க: World Cup 2023: ஆப்கான் தந்த அதிர்ச்சி; இங்கிலாந்து படைத்த மோசமான வரலாறு!