ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி 12 வது லீக் போட்டி நடைபெற்றது. 


அதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.


இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதுமட்டுமின்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எட்டாவது முறையாக தோற்கடித்து இந்திய அணி சாதனை செய்தது.


ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்:


முன்னதாக, பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பிய போது, அங்கு கூடியிருந்த இந்திய ரசிகர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கமிட்டனர்.


இந்திய ரசிகர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து ஒரு தரப்பினரும், மைதானத்தில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கம் இட்டது தவறு இல்லை என்று ரசிகர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் சமூக வலைதள பக்கங்களில் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். மேலும், இது அரசியல் ரீதியாகவும் பார்க்கப்பட்டது.






புகார் அளித்த பிசிபி (PCB):


இந்நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளது.


இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று (அக்டோபர் 17) தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் நாங்கள் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். 


மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்” என்று கூறியுள்ளது. இதனிடையே, இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.  


இதற்காக அந்த அணி தற்போது பெங்களூருவில் முகாமிட்டுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் படிக்க: World Cup 2023: பந்துவீச்சு பயிற்சியில் ரோஹித் சர்மா.. டிப்ஸ் தரும் ரவிசந்திரன் அஸ்வின்.. வைரலாகும் வீடியோ!


மேலும் படிக்க: தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் அணி!