2023 உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்த அஜய் ஜடேஜா, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரன் சச்சின் டெண்டுல்கர் புத்தகத்தை படித்த போது தான், அவரை சந்திக்க ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.
அசத்திய ஆப்கானிஸ்தான்:
இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறந்த முறையில் விளையாடியது. அந்த வகையில் மொத்தம் 9 லீக் ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி 4 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் சந்தித்தது. அதேநேரம் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அணிகளை காட்டிலும் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6 வது இடத்தை பிடித்து அசத்தியது. இது அந்நாட்டு ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. மேலும், இந்த உலகக் கோப்பையில் நன்றாக விளையாடியதால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தான். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
சச்சின் தொடர்பான புத்தகத்தை வாசித்த இப்ராஹிம் சத்ரான்:
இது குறித்து பேசியுள்ள அவர், “ உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. எங்கள் காலத்தில் பாகிஸ்தான் அணி எப்படி இருந்ததோ, அப்படிதான் இப்போது ஆப்கானிஸ்தான் அணியை பார்க்கிறேன். அணியில் உள்ள வீரர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எந்த கருத்தையும் வெளிப்படையாக கூறுகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்களில் மிகவும் வித்தியாசமான வீரர் இப்ராஹிம் சத்ரான். அவர் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கொண்டவர். ஒருமுறை ஜத்ரான் சச்சின் டெண்டுல்கர் தொடர்பான புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சச்சின் டெண்டுல்கரை சந்திக்க அழைத்து வர முயற்சிக்கிறேன் என்று கூறினேன். அதேபோல் ஜானத்தன் ட்ராட் மிகச்சிறந்த பயிற்சியாளர். டைமிங், ஒழுக்கம், கட்டுப்பாடு என்று அனைத்திலும் தீவிரமாக இருப்பவர்.
அவர் கிரிக்கெட் களத்தை விட்டு சில காலம் வெளியில் இருந்தாலும், தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு பயற்சியளிக்க ஜாம்பவான் வீரர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஜானத்தன் ட்ராட் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். நிச்சயம் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணம்” என்று கூறினார்.
முன்னதாக, அஜய் ஜடேஜா மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர்களை அழைத்து வந்த சச்சின் டெண்டுல்கரை சந்திக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: தங்கள் லக்கேஜ்களை தாங்களே ஏற்றும் பாகிஸ்தான் வீரர்கள்.. மீண்டும் சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் வாரியம்!
மேலும் படிக்க: Watch Video: குதிரைக்கு தீவனம் ஊட்டிய மகேந்திர சிங் தோனி.. குஷியில் குதித்த குதிரைக்குட்டி.. இணையத்தில் வைரல்!