2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படவில்லை. வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த மோசமான செயல்பாடு காரணமாக பாகிஸ்தான் அணியிலும், வாரியத்திலும் பல மாற்றங்கள் நடந்தது. 


பாபர் அசாம் மூன்று வடிவங்களின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும், வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். 2023 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்று போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும்போது இன்சமாம் உல் ஹக் தலைமை தேர்வாளர் பதவியை விட்டு வெளியேறினார். அதன்பிரகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸை பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளராக மாற்றியது. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சல்மான் பட், ராவ் இப்திகார் அஞ்சும், கம்ரான் அக்மல் ஆகியோரும் தேர்வுல் குழுவில் இடம் பெற்றனர். இத மூன்று முன்னாள் வீரர்களும் தலைமை தேர்வாளர் வஹாப் ரியாஸின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். இருப்பினும், தேர்வுக் குழுவில் முன்னாள் வீரர் சல்மான் பட் சேர்க்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சலசலப்பு மற்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 


இதையடுத்து, வஹாப் ரியாஸ் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து தேர்வு குழுவில் இருந்து சல்மான் பட் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை தேர்வாளர் வஹா[ப் ரியாஸ், சல்மான் பட்டை தேர்வுக் குழுவின் ஆலோசனை உறுப்பினராக சேர்ப்பதற்கான தனது முடிவை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். சல்மான் பட்டை நியமிக்கும் முடிவு பரிசீலனையில் இருந்தது, முழுமையான ஆய்வுக்கு பிறகு அவர் ஆலோசனை உறுப்பினராக நியமிக்கப்பட மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டது. 


தேர்வுக் குழுவின் ஆலோசனைக் குழுவில் கூடுதல் உறுப்பினர்கள் யாரேனும் இருப்பார்கள் என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதில், “ ஆலோசனை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் உரிமை, தலைமை தேர்வாளருக்கு மட்டும் உள்ளது. தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைகள் மற்றும் தகவல்களை வழங்குவதே ஆலோசனை உறுப்பினரின் பணியாகும். தேர்வுக் குழுவின் ஆலோசனைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 






அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். அப்போது,  பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய உடைமைகளை தாங்களே டிரக்கில் ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இது தவிர, சமூக ஊடக பயனர்கள் தொடர்ந்து கருத்துகள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.