மிக்ஜாம் புயல்:


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நேற்று பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கிப்போனது.  தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.


இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் மீட்புபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதனிடையே, இந்த மிக்ஜாம் புயலால் இன்று மதியம் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,சென்னை வெள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.


கவலை தெரிவித்த டேவிட் வார்னர்:


டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்றும் வலியிறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ சென்னையின் இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அறிந்து நான் கவலையடைந்துள்ளேன். இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் இந்த சமயத்தில் நினைத்து பார்க்கிறேன். எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். தேவை என்றால் மேடான பகுதிகளை நோக்கி செல்ல வேண்டும்.






மேலும் நீங்கள் உதவி செய்யும் நிலையில் இருந்தால் தயவுசெய்து நிவாரணங்கள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும். இந்த சமயத்தில் நம்மால் இயன்றவரை உதவிகள் செய் ஒன்றுபடுவோம்'' என தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழக வீரர் அஸ்வினும் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளாத்தால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 


முன்னதாக, டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவில் விளையாடிவருகிறார். அதேபோல், ஒவ்வொரு போட்டியின் போதும் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகி பிரபலமடையும் பாடல்களுக்கு மைதானத்தில் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவரின் இந்த செயல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். அதேபோல், இந்தியாவில் டேவிட் வார்னருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தான் அவர் சென்னை வெள்ளபாதிப்பு குறித்து கவலை தெரிவித்து இருக்கிறார்.


இதனிடையே,  சென்னை வெள்ள பாதிப்பு குறித்து இந்திய கிரிக்கெட்  வீரர்கள் பேசாத நிலையில் டேவிட் வார்னர் பேசியுள்ளதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.