இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இருப்பவர் எம்.எஸ்.தோனி. கடந்த முறை தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.


கோயிலுக்கு சென்ற தோனி:


இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி இன்று அவரது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தியோரி மா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தோனி அந்த கோயிலுக்கு வந்திருக்கும் தகவலறிந்த ரசிகர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். ரசிகர்கள் பலரும் தோனியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.






இதையடுத்து, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கத்தில் தோனி சாமி தரிசனம் செய்த சிறிது நேரத்தில் புறப்பட்டார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 2020ம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, தற்போது வரை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மட்டும் ஆடி வருகிறார். ஓய்வுக்கு பிறகு தோனி தனது நேரத்தை குடும்பத்தினருடனும், தனக்கு பிடித்த விஷயங்களிலும் செலவிட்டு வருகிறார்.


அடுத்த ஐ.பி.எல். ஆடுவாரா? மாட்டாரா?


இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் தோனி ஆடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தோனி ஐ.பி.எல்.லில் ஆடமாட்டார் என்று வதந்தி பரவி வந்தாலும், அவர் கடந்தாண்டு வரை ஐ.பி.எல். தொடரில் கலக்கி வருகிறார். கடந்த சீசனில் தோனி 12 இன்னிங்சில் பேட் செய்து 104 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 3 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும்.


விக்கெட் கீப்பிங்கில் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் தோனி, இன்னும் அதேவேகத்தில் கீப்பிங் செய்து வருகிறார். தோனி ஐ.பி.எல். தொடரில் இதுவரை 250 போட்டிகளில் ஆடி 218 இன்னிங்சில் பேட் செய்து 24 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 82 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 84 ரன்களை எடுத்துள்ளார்.


மேலும் படிக்க: Highest Target: 96 ஆண்டுகளாக தொட முடியாத சாதனை? இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச சேஸிங் வரலாறு?


மேலும் படிக்க: Watch Video: ஜூனியர் கோலி வர்றாங்களா? விராட் கோலி விளையாடாததற்கான காரணம்.. டிவில்லியர்ஸ் ஓப்பன் Talk