இந்தியாவில் நடைபெறும் லீக் போட்டிகளில் மிகப் பெரிய லீக் போட்டி என்றால் அது ஐபிஎல். இந்த ஐபிஎல்-இல் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றது. இந்த லீக்கில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவைதான். இந்த இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையிலும், மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையிலும் வென்றுள்ளது. 


கடந்த ஆண்டு நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்க்கு முன்னதான ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டார். அதன் பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா என மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்ததற்கு ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடி மற்றும் ஜெர்சியை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல லட்சக்கணக்கான ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தை பின் தொடர்வதை கைவிட்டனர். 


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். இப்படியான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான மார்க் பவுச்சர் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர். குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு ட்ரேட் செய்யப்பட்ட பின்னர், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி திறமையை தொடர்ந்து வளர்க்கவும், ரோகித் சர்மாவிடம் இருந்து சில சுமைகளை இறக்கி வைக்கவும் அணி நிர்வாகம் முடிவெடுத்ததால்தான் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பொறுப்பு வாங்கப்பட்டது. 




இது முழுக்க முழுக்க கிரிக்கெட் முடிவு என்று நினைக்கிறேன். ஹர்திக்கை மீண்டும் ஒரு வீரராகப் அணிக்கு கொண்டுவருவதற்கான காலகட்டம் என நினைக்கின்றோம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மாறுதல் கட்டம். இந்தியாவில் நிறைய பேருக்கு புரியவில்லை, மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். உணர்ச்சிகளை அகற்றிவிட்டு இதில் இருக்கும் கிரிக்கெட்டை மட்டும் யோசியுங்கள். இது கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட முடிவு என்று நான் நினைக்கிறேன் மேலும் ஒரு வீரராக ரோஹித்திடமிருந்து சிறந்ததை வெளிப்படுத்தும் என்று நினைக்கிறேன்.


ரோஹித் தனது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறார். எனவே கேப்டன் பொறுப்பை அவரிடமிருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 


இந்த வீடியோவில் ரோகித் சர்மாவின் மனைவியும் மேலாளருமான ரித்திகா, இந்த வீடியோவில் பேசப்படும் பல விஷயங்கள் முற்றிலும் தவறானவை என கமெண்ட் செய்துள்ளார். இது தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.