டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடாததற்கான காரணம்:


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் தந்தையாகப் போகிறார். இந்த தகவலை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரின் நாயகன் மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதனைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட வில்லை அதேபோல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடத கோலி டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார்.


இதனைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார். முன்னதாக அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்தது.  அவர் ஏன் விளையாடவில்லை என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனிடையே தன்னுடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தான் அவர் விளையாடவில்லை என்றும் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதால் தான் போட்டிகளில் பங்குபெறவில்லை என்பது போல் பல்வேறு தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.


இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருப்பு:


இந்நிலையில், விராட் கோலி  - அனுஷ்கா தம்பதி இரண்டாவது குழந்தையின் வருகைக்காக தான் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் உலா வந்தது. இச்சூழலில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சில கருத்துகளை கூறியுள்ளார்.






டிவில்லியர்ஸ் தன்னுடைய யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, "விராட் கோலி இப்போது குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம். மகிழ்ச்சியான விஷயம் தான். விராட் - அனுஷ்கா தம்பதி இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான விஷயம். இதுபோன்ற நேரங்களில் குடும்பத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இப்படியான நேரத்தை குடும்பத்துடன் செலவிடவில்லை என்றால் வாழ்வதில் அர்த்தமே இல்லை. விராட் கோலி அதை தான் செய்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.


விராட் கோலியும் டிவில்லியர்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாக விளையாடியிருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அன்று முதல் தற்போது வரை இருவரும் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். முன்னதாக, விராட் கோலி அனுஷ்கா சர்மாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே வாமிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இச்சூழலில், இந்த தம்பதி இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs ENG: பாதியிலேயே கமெண்ட்ரி செய்வதை நிறுத்திச்சென்ற சுனில் கவாஸ்கர்! காரணம் என்ன?


மேலும் படிக்க: IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே நாளில் 179 ரன்கள்...கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்!