பெவிலியனுக்கு கோலி பெயர்:


கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயது வீரராக இந்திய அணிக்குள் நுழைந்தவர் விராட் கோலி. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் தனது பேட்டிங் திறமையை மிகச்சிறப்பாக வெளிபடுத்தினார். இதன் மூலம் கிரிக்கெட் உலகின் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார்.


ரன் மிஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கோலி கிரிக்கெட்டில் செய்யாத சாதனை என்ன என்று கேட்கும் அளவிற்கு பெயர் பெற்றார்.  சூழல் இப்படி இருக்க தற்போது ஒரு புதிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.


அதன்படி, தான் பிறந்து வளர்ந்து கிரிக்கெட் கற்றுக்கொண்ட ஊரான டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தின் பெவிலியனுக்கு ’விராட் கோலி’ பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 


முன்னதாக, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தொடங்கி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற்றது.  



இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் டக் அவுட் ஆகி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தனர்.


அதேநேரம், விராட் கோலி அதிரடியாக விளையாடி 116 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 85 ரன்கள் எடுத்து ஜோஷ் ஹாசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.







இச்சூழலில், டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தின் பெவிலியனுக்கு தனது பெயர் சூட்டப்பட்டது குறித்து விராட் கோலி அவரது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.


இது தொடர்பாக இந்திய கிரிக்கெட்  வீரர் கே.எல்.ராகுலுடன் நடைபெற்ற நேர்காணலில் விராட் கோலி பகிர்ந்து கொண்ட கருத்துகள் பின்வருமாறு:


“என்னைப் பொறுத்தவரை நான் 19 வயதுக்குட்பட்ட ரஞ்சி கிரிக்கெட் விளையாடி வளர்ந்த மைதானம் அது தான். நான் அங்கு இந்திய அணிக்காகவும் விளையாடினேன். அந்த நினைவுகள் உங்கள்  மனதில் பசுமையாக இருக்கும்.


அதை உங்களால் உணர முடியும். அங்கு இருந்து தான் எனக்கு எல்லா வாய்ப்புகளும் தொடங்கியது.  மீண்டும் அருண் ஜேட்லி மைதானத்தில் விளையாட இருப்பது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.” என்று விராட் கோலி கூறினார்.



தொடர்ந்து பேசிய அவர், “எனது பெயரிடப்பட்ட டெல்லி அருண் ஜேட்லி பெவிலியன் முன்பு விளையாடுவது எனக்கு சங்கடமாக உள்ளது. அதை பற்றி எனக்கு அதிகம் பேச விருப்பமில்லை.


ஆனால், இது எனக்கு தரப்பட்டுள்ள ஒரு பெரிய மரியாதை. அதே நேரம் பெவிலியனுக்கு எனது பெயர் வைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்திகிறது. இதை நன்றியுடன் உணர்கிறேன். இந்த உணர்வு எனக்கு புதிதாக ஒன்றாக இருக்கிறது. இது போன்ற ஒரு உணர்வை எனக்கு நடக்கும் என்று நான் இதற்கு முன்பாக உணர்ந்தது இல்லை. ” என்று கூறியுள்ளார்.


 


இதனிடயை உலகக் கோப்பை தொடரில் வெற்றி பயணத்துடன் தொடங்கியுள்ள இந்திய அணியும், வங்கேச அணியுடனான முதல் போட்டியில் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் அணியும் நாளை (அக்டோபர் 11) டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ENG vs BAN LIVE Score: 365 ரன்கள் டார்கெட்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்காள தேசம்


 


மேலும் படிக்க: ENG vs BAN: அதிரடியில் பலம் காட்டும் இங்கிலாந்து.. பரிதவிக்குமா வங்கதேசம்..? யார் கை ஓங்கும்.. ஒரு பார்வை..!