ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் கொடி கட்டிப்பறந்த அணிகள் பலவும் இன்று தடுமாற்றமான நிலையில் உள்ளது. அந்த வரிசையில் ஒரு காலத்தில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளித்து வந்த அணி ஜிம்பாப்வே.


ஜிம்பாப்வே - இங்கிலாந்து:


தற்போது மீண்டும் இளம் வீரர்களின் அபார ஆட்டத்தால் அனைவரும் கவனிக்கும் வகையில் ஆடி வருகிறது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற அணிகளுடனே அவ்வப்போது ஆடி வரும் ஜிம்பாப்வே அணி தற்போது உலகின் ஜாம்பவான் அணியான இங்கிலாந்துடன் மோத உள்ளது.




இரு அணிகளும் வரும் 2025ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோத உள்ளனர். சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்ள உள்ளனர். இங்கிலாந்து அணியும் ஜிம்பாப்வே அணியும் கடைசியாக 2003ம் ஆண்டு  நேருக்கு நேர் டெஸ்ட் போட்டியில் மோதிக் கொண்டனர். அந்த போட்டியில்தான் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.


22 ஆண்டுகளுக்கு பிறகு:


அதன்பின்பு இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் மோதிக்கொள்ளவில்லை. இந்த நிலையில், மீண்டும் இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு நடைபெற உள்ள இந்த போட்டி எங்கு நடக்கும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ. ரிச்சர்ட் காவ்ல்ட் கூறும்போது, நாங்கள் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுடன் நெருக்கமான உறவை மேற்கொள்ள விரும்புகிறோம். அந்த நோக்கத்திலே அவர்களுடன் டெஸ்ட் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அட்டவணை நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் பல நாடுகளுடன் எங்களால் முடிந்த வரை விளையாடுவோம் என்றார்.




இரு அணிகளும் கடைசியாக ஆடிய போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்தும், ஜிம்பாப்வேயும் பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடினாலும் இரு அணிகளும் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நேருக்கு நேர் ஆடியுள்ளன. இரு அணிகளும் முதன்முறையாக 1996ம் ஆண்டு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடின. அந்த 2 டெஸ்ட் போட்டிகளும் டிரா ஆனது.


இரு அணிகளும் அதன்பின்பு 2000ம் ஆண்டு ஆடின. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. கடைசியாக 2003ம் ஆண்டு நடந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. இந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து – ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டியில் மோத உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: MS Dhoni Retirement: கிரிக்கெட்டின் மாமன்னன்... உலகக்கோப்பை நாயகன்.. தலைமகன் தோனி ஓய்வு பெற்ற நாள் இன்று..!


மேலும் படிக்க: Hasaranga Retires: டெஸ்ட் போட்டிகளுக்கு 'Good Bye' சொல்லப்போகும் ஹசரங்கா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!