உலகின் பிட்டஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கோலி. நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு பிறகு அதிகளவில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட விளையாட்டு வீரராகவும் பார்க்கப்படுகிறார். 


இந்தநிலையில், வருகின்ற ஆசியக்கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில், விராட் கோலி ஜிம்மில் பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் இன்ஸ்டா பதிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘என் வாழ்வின் மகிழ்ச்சியான இடம்’ என்று ஜிம்மை குறிப்பிட்டு இருந்தார். 






விராட் கோலி ஆகஸ்ட் 15ம் தேதியான இந்தியாவின் சுதந்திர தின விழாவில் ஓய்வு எடுக்காமல், ஜிம்மில் உள்ள ட்ரெட்மில்லில் வேகமாக ஓடி பயிற்சி மேற்கொண்டார். உடல் முழுவதும் வேர்வை படிந்து அசாத்திய பிட்னஸை வெளிபடுத்தினார். 


விராட்கோலியில் அசைக்க முடியாத நம்பிக்கை, இடைவிடாத அர்ப்பணிப்பு, உடல் வலிமை, அதிகபட்ச உடற்பயிற்சி என உடலின் மீதும், கிரிக்கெட்டின் மீதும் இவர் காட்டும் காதல் அளக்க முடியாதது.


ஆசியக் கோப்பை:


ஆசியக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் ஹைபிரித் மாடல் முறையில் நடத்தப்பட இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இலங்கை கண்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. 


ஆசிய கோப்பை தொடரில் கோலி மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடக்க விராட் கோலிக்கு 102 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12, 898 ரன்கள் எடுத்துள்ளார். 


321 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்களை எட்டி தற்போது இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைக்க இருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, ரிக்கி பாண்டிங் மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். 


விராட் கோலியின் சமூக வலைதள வருமானம்: 


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, போட்டோ ஷேரிங் செயலியான இன்ஸ்டாகிராமில் தனது ஒவ்வொரு பதிவிற்கும் 11.45 கோடி ரூபாயை வருமானமாக பெறுவதாக தகவல் வெளியாகியது.


இதுகுறித்து மறுப்பு தெரிவித்த விராட் கோலி, “வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன். ஆனால் சமூக ஊடகங்களில் எனது வருவாய் குறித்து பரவும் செய்திகள் உண்மையல்ல" என தெரிவித்தார். 


இருப்பினும், ரொனால்டோ ஒவ்வொரு பதிவிற்கும் இந்திய மதிப்பின்படி, 26,75 கோடியை வருமானமாக பெறுவதாகவும், அதிக பாலோவர்களை கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ள மெஸ்ஸி ஒரு பதிவிற்கு 21.49 கோடி வருமானமாக பெறுவதாகவும் கூறப்பட்டது.


ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியின் சமூக வலைத்தள வருமானத்தை வெளியிட்ட ஒரு குறிப்பிட்ட நிறுவனம்தான் விராட் கோலி, ஒரு பதிவிற்கு 11.44 கோடி வருமானமாக பெறுவதாக தெரிவித்தது.