உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் உலா வருபவர் வனிந்து ஹசரங்கா. இலங்கை அணியின் முக்கிய வீரரான இவர் பல ஆட்டங்களில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.
ஓய்வு பெறும் ஹசரங்கா?
இந்த நிலையில், ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இலங்கை கிரிக்கெட் அணிக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. தனது ஓய்வு குறித்து ஹசரங்கா ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சிவப்பு நிற பந்து போட்டியான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வெள்ளை நிற பந்து போட்டிகளான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் முழு நேர கவனம் செலுத்த ஹசரங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்கககரா, மலிங்கா, தில்ஷன், முரளிதரன் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு தற்போதுள்ள இலங்கை அணியின் செயல்பாடு என்பது பெரியளவில் கவனம் ஈர்ப்பதாக இல்லை. அவ்வப்போது சில வெற்றிகளை பெற்றாலும் அவர்களால் அவர்களது காலத்திற்கு முந்தைய வீரர்களை போல பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை.
ரசிகர்கள் அதிர்ச்சி:
இந்த சூழலில், நட்சத்திர வீரராக உருவெடுத்து வரும் ஹசரங்கா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்திருப்பது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதே ஆன ஹசரங்கா இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஆனால், 48 ஒருநாள் போட்டிகளில் ஆடி 67 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் ஆடி 91 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல், தொடரில் 26 போட்டிகளில் ஆடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, குறைந்த ஓவர்கள் என்று அழைக்கப்படும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தென்னாப்பிரிக்க வீரர் குயின்டின் டி காக் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.
சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் மூன்று வடிவ போட்டிகளில் ஆடுவதற்கு பெரியளவில் விரும்பவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. அதற்கு அவர்களது உடல்தகுதியும் முக்கிய காரணமாக அமைகிறது.
மேலும் படிக்க: Watch Video: ஒரு நொடியில் உயிர் தப்பிய வீரர்.. இலங்கை ஸ்டேடியத்தில் அட்டகாசம் செய்யும் பாம்புகள்.. அப்போ ஆசியக் கோப்பை?
மேலும் படிக்க: Tilak Varma: ”ஒரு நாயகன் உதயமாகிறான்” - ஆசிய கோப்பை தொடரில் களமிறங்குகிறாரா இவர்? புகழ்ந்து தள்ளிய ட்ராவிட்..