கிரிக்கெட் வரலாறு தன் பக்கங்களில் எப்போதும் சிலரை மட்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கும். அப்படி உலக கிரிக்கெட் வரலாறே தன் பொன் எழுத்துக்களால் சிலரின் வரலாறை மட்டும்தான் பொறித்துள்ளது.. அவர்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டிற்கு மகுடம் மேல் மகுடம் சேர்த்தவரும்தான் மகேந்திர சிங் தோனி.


தோனிக்கு அறிமுகம் என்பது இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் அரங்கிலும் தேவையே இல்லாத ஒன்று. சாதனை மேல் சாதனை என்று தனது கிரிக்கெட் வாழ்வில் உச்சத்திற்கு சென்றவர். இந்திய கிரிக்கெட் அணியை டெல்லி, மும்பை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் ஜார்க்கண்டில் இருந்து சடாமுடியனாக இந்திய அணிக்குள் அறிமுகமானவர்தான் தோனி.


பட்டையை கிளப்பிய தோனி:




வங்காளதேச தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலே டக் அவுட்டானாலும், தோனியிடம் அபார திறமை இருப்பதை உணர்ந்த கங்குலி அவருக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்புகளை வழங்கினார். அதுவும் விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத வேளையில், ஒன் டவுன் வீரராக உள்ளே வந்தவர்தான் நம் தோனி.


அன்று தோனி அடித்த அடி என்பது இன்று வரை மறக்க முடியாத ஒரு அடிதான். சுழல், வேகம் என்று பந்துவீச்சில் யார் வீசினாலும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி 148 ரன்களை கொளுத்திய தோனி 2கே கிட்ஸ் பார்க்கும் தோனி கிடையாது. தோனியின் சரவெடியான பேட்டிங் இந்திய அணியில் அவருக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்து தந்தது. இலங்கை அணிக்கு எதிராக 299 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஒன் டவுன் வீரராக களமிறங்கிய தோனி ஆடிய ஆட்டம் அவரது மற்றொரு ருத்ரதாண்டவம் ஆகும்.


உலகக்கோப்பை நாயகன்:




பவுண்டரி, சிக்ஸர் என தோனி மட்டுமே 183 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். கங்குலிக்கு பிறகு ராகுல் டிராவிட் கேப்டன்சியில் ஜொலிக்காமல் போக, 2007ல் மோசமான உலகக்கோப்பை தோல்வியில் துவண்டு இருந்தது இந்திய அணி. தோனி கீப்பிங் செய்யும்போது அவரிடம் இருந்த புத்திக்கூர்மையையும், வியூகத்தை கண்ட சச்சின் பி.சி.சி.ஐ.யிடம் டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக தோனியை நியமிக்க பரிந்துரைத்தார்.


சீனியர் வீரர்கள் யாருமே அல்லாமல் தோனி தலைமையில் முற்றிலும் இளம்படையாக டி20 உலகக்கோப்பைக்கு சென்ற இந்திய அணி மீது ரசிகர்கள் கூட பெரிய எதிர்பார்ப்புடன் இல்லை. அது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் சாம்ராஜ்யம் செய்த காலம். ஆனால், யுவராஜ், கம்பீர், ரோகித், ஸ்ரீசாந்த் என இளம்பட்டாளங்களை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று இந்தியா முழுவதும் தன் பெயரை சொல்ல வைத்தார் தோனி.


கேப்டன் கூல்:


அதுவரை எந்த அணியும் இப்படி ஒரு ஃபினிஷரை பார்த்திராத தருணத்தில், கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஃபினிஷராக பட்டையை கிளப்பினார். விராட்கோலி, ரோகித், ஜடேஜா, ரெய்னா, புவனேஷ்வர், பும்ரா, அஸ்வின், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான் என இந்திய அணியையும் மறுபுறம் கட்டமைத்தார். கபில்தேவிற்கு பிறகு உலகக்கோப்பையை முத்தமிடப்போவது யார்? என்று இந்திய ரசிகர்கள் 28 ஆண்டுகள் காத்திருந்த தருணத்தில் 2011ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் இந்திய அணியை உலகக்கோப்பையை தோனி முத்தமிட வைத்ததையும் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது.




சாம்பியன் என்பதற்கு மிகமிகப் பொருத்தமான அணி அந்த இந்திய அணி. யுவராஜ், கம்பீர், சேவாக், சச்சின், விராட், அஸ்வின், ரெய்னா, நெஹ்ரா என அந்த இந்திய அணியை யாராலும் மறக்க முடியாது. சரவெடியான பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய தோனி வெற்றியோ, தோல்வியோ எதுவானாலும் தன்னடக்கத்துடனே காணப்பட்டதால் அவரை மிஸ்டர் கூல் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.


ஓய்வு பெற்ற நாள்:


இந்திய அணிக்காக மட்டுமின்றி சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காகவும் மகுடம் மேல் மகுடம் சூடியுள்ளார். இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்காக தோனி ஆடிய ருத்ரதாண்டவமும், கேப்டனாக அவர் எடுத்த அசாத்திய முடிவுகளும் பல முறை மைதானத்தில் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் இந்திய அணிக்கு இதற்கு முன்பும் சரி, இனியும் சரி தோனி போல ஒரு வெற்றிகரமான கேப்டனை நாம் பார்க்கவே முடியாது.




இந்திய அணிக்காக பல வெற்றி மேல் வெற்றிகளை குவித்த தோனி 2019ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதியில் ரன் அவுட் ஆன தருணம் இந்திய ரசிகர்கள் கண்கலங்கிய தருணம் என்றே சொல்ல வேண்டும். அதன்பின்பு இந்திய அணிக்காக ஆடாத கிரிக்கெட் சகாப்தம் வீரரான தோனி கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாள் இன்று.