உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்கள் அடிப்படை மனிதாபிமனத்துடன் கூட நடத்தப்படாமல் மிகவும் இழிவாக நடத்தப்பட்டு வந்தனர். நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு, சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய வாய்ப்பும், அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்பட்டு வருகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் திருநங்கை:
விளையாட்டுகளிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டில் திருநங்கை ஒருவர் அடியெடுத்து வைத்துள்ளார்.
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளை ஐ.சி.சி. தீவிரமாக நடத்தி வருகிறது. தகுதிச்சுற்றுகளில் ஒன்றான மகளிர் டி20 அமெரிக்கா குவாலிஃபயர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள கனடா நாட்டு மகளிர் அணியில் 29 வயதான மெக்கஹே இடம்பெற்றுள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார்.
ஐ.சி.சி. அனுமதி:
ஆஸ்திரேலியாவில் இருந்து கனடாவிற்கு கடந்த 2020ம் ஆண்டு குடிபெயர்ந்த மெக்கஹே தான் ஒரு திருநங்கை என்று உணரத் தொடங்கிய பிறகு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறினார்.
கிரிக்கெட் விதிப்படி மெக்கஹே சர்வேதச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தகுதியானவர் என்பதை ஐ.சி.சி. நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஐ.சி.சி. வகுத்துள்ள ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ள திருநங்கைகளுக்கான உடற்தகுதி மெக்கஹேவிற்கு இருப்பதால் அவருக்கு ஆடுவதற்கான தகுதி இருப்பதாக ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ஆடப்போகும் முதல் திருநங்கை என்ற மாபெரும் வரலாற்றை மெக்கஹே படைக்கப்போகிறார். கடந்த அக்டோபரில் தென் அமெரிக்க மகளிர் சாம்பியன்ஷிப் தொடரில் கனடா அணிக்காக மெக்கஹே ஆடினார்.
நெகிழ்ச்சி:
மெக்கஹே இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ளார். பிரேசில் அணிக்கு எதிராக ஆடிய அந்த 4 போட்டிகளிலும் வெற்றியே பெற்றுள்ளார். இந்த நிலையில், வரும் 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையில் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெறும் அமெரிக்கா குவாலிபயரில் அமெரிக்கா, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் கனடா அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் மெக்கஹே இடம்பெற்றுள்ளார். இவர் ஒரு தொடக்க வீராங்கனை ஆவார். இதில் கனடா மகளிர் அணிக்கே வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி.யின் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறித்து மெக்கஹே கூறியிருப்பதாவது, எனது சமூகத்தை பிரதிநிதிப்படுத்துவதை என்னால் செய்ய முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க: IND vs PAK: ஆசிய கோப்பை யுத்தம்..! நாளை மோதும் இந்தியா - பாகிஸ்தான்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பட்டாளம்..!
மேலும் படிக்க: Asia Cup 2023: எனக்கு 13 ஆயிரம்.. உனக்கு 10 ஆயிரம்..! கிங் கோலி, ஹிட் மேன் படைக்கப்போகும் புதிய சாதனை..!