கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு மினி கிரிக்கெட் திருவிழாவாக ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.


இந்தியா - பாகிஸ்தான்:


பாகிஸ்தான், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடர் பாகிஸ்தானில் கடந்த 30-ந் தேதியே தொடங்கிவிட்டது. பாகிஸ்தான், இலங்கை அணிகள் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை நடக்கிறது.




இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் முதல் போட்டியிலே பாகிஸ்தானுடன் மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பல்லேகேலே மைதானத்தில் இந்த போட்டி மதியம் நடைபெற உள்ளது.


மழைக்கு வாய்ப்பு:


ரசிகர்கள் இந்த போட்டியை காண மிகுந்த ஆவலுடன் உள்ள நிலையில், நாளை பல்லேகேலே மைதானத்தில் மழை பெய்வதற்கு 90 சதவீத வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இரு நாட்டு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து தொடருக்கு முழு பலத்துடன் இந்திய அணி திரும்பியுள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அயர்லாந்துக்கு எதிராக தரமான கம்பேக் அளித்த பும்ராவும், நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் திரும்பியிருப்பதும் கூடுதலாக பலமாக உள்ளது. இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது விராட்கோலி, ரோகித்சர்மா ஆவார்கள்.


பேட்டிங் - பவுலிங்:


பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் நேபாளத்திற்கு எதிராக 342 ரன்கள் குவித்தது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கேப்டன் பாபர் அசாம், ரிஸ்வான், இப்திகார், இமாம் உல் ஹக், பக்கர் ஜமான் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் பலம் ஆவார்கள்.




பாகிஸ்தான் அணி அன்று முதல் இன்று வரை பந்துவீச்சில் பலமாகவே இருந்து வருகின்றனர். ஷாகின் அப்ரீடி புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவராக உள்ளார். நசீம்ஷா, ஹாரீஷ் ராஃப் வேகத்தில் கூடுதல் பலமாக உள்ளனர். ஷதாப்கான், முகமது நவாசும் பந்துவீச்சில் அசத்தினால் அவர்களுக்கு பலம் ஆகும். இந்திய அணியிலும் பவுலிங்கில் முகமது சிராஜ், ஷமி, ஹர்திக், அக்‌ஷர், ஜடேஜா அசத்தினால் அருமையாக இருக்கும்.


இந்திய அணியின் இளம் வீரர்களுக்கும் இந்த தொடர் அருமையான வாய்ப்பாக அமையும். ரோகித், விராட், சுப்மன், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா என இந்திய பேட்டிங் ஆர்டர் சிறப்பாக ஆடினால் நிச்சயம் இந்தியா ரன் வேட்டையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் சரிசம பலமாக இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


நாளை நடக்கும் இந்த போட்டியை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டாரிலும் கண்டு களிக்கலாம்.


மேலும் படிக்க: IND vs PAK Asia Cup 2023: அதிர்ச்சி தரும் வெதர் ரிப்போர்ட்! ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்


மேலும் படிக்க: IND vs PAK Asia Cup: ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை பந்தாடும் இந்தியா; இதுவரை நடந்தது என்னென்ன?