இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கேதசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரின் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை நடக்கிறது.
விராட்கோலி - ரோகித்சர்மா:
உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி ஆடும் முக்கியமான ஒருநாள் போட்டித் தொடர் இது என்பதால் இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடர் ஆகும். இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன்கில், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், சாம்சன், இஷான்கிஷன், கே.எல்.ராகுல் என பலர் இருந்தாலும் இவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது கேப்டன் ரோகித்சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட்கோலியுமே ஆவார்கள்.
ஒருநாள் போட்டிகளில் ஆடிய அதிக அனுபவமும், கடினமான சூழ்நிலைகளை திறம்பட கையாண்ட அதிக திறமையும் கொண்டவர்கள் இவர்கள் இருவரும். இவர்கள் இருவரும் நிலைத்து நின்றுவிட்டால் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களான விராட்கோலி – ரோகித் சர்மா இருவரும் ஆசிய கோப்பைத் தொடரில் புதிய வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளது.
புதிய வரலாறு படைப்பார்களா?
அதாவது, கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட்கோலி இன்னும் 102 ரன்கள் எடுத்தால் சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களிலே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி உள்ளார். ரன் குவிப்பில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அவரது மகுடத்தில் 13 ஆயிரம் ரன்களை கடந்தால் இது மற்றொரு சாதனையாக அமையும்.
அதேபோல, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் 163 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற யாருமே தொட முடியாத சாதனையை படைத்துள்ள ரோகித்சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்தால் தன்னுடைய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைப்பார்.
இந்த நிலையில், இந்த ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் இந்தியா மேலும் குறைந்தது 3 ஆட்டங்கள் ஆடும். இறுதிப்போட்டிக்கு செல்லும் பட்சத்தில் இந்திய அணி இந்த தொடரில் 7 போட்டிகள் ஆட வாய்ப்பு உள்ளது. இதனால், ரோகித் சர்மா – விராட்கோலி இருவருமே ஆசிய கோப்பையில் புதிய சாதனைகளை படைப்பார்கள் என்று நம்பலாம்.
விராட்கோலி இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 ஆயிரத்து 898 ரன்களும், ரோகித்சர்மா 244 போட்டிகளில் ஆடி 9837 ரன்களும் குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: BAN vs SL Match Highlights: வங்காள தேசத்தை வீழ்த்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இலங்கை; 11 ஒருநாள் போட்டிகளில் தொடர் வெற்றி
மேலும் படிக்க: BCCI Media Rights: ஸ்டார் ஸ்போர்ட்ஸின் 11 ஆண்டு கால சாம்ராஜ்ஜியத்தை உடைத்த ’வயாகாம்’: ஒளிபரப்பு உரிமத்தை பெற்று அசத்தல்