ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் கடந்த 30-ந் தேதி தொடங்கிய நிலையில், நாளை தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே இரு நாட்டிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். நாளைய போட்டிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், நாளைய போட்டியில் வானிலை போட்டி நடக்க வழிவிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


வெதர்மேன் ரிப்போர்ட்:


வெதர்மேன் நவ்தீப் தாஹியா அளித்துள்ள சமீபத்திய வானிலை அறிக்கையில் போட்டி நடைபெறும் பல்லேகலே நிலவரம் குறித்து தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,



  • நாள் முழுவதும் வானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். மணிக்கு 10-20 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

  • மாலை 4 மணி முதல் 5 மணி வரை மிதமானது முதல் அதிக வேகத்துடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • 5 மணிக்கு மேல் நிகழ்தகவு செங்குத்தாக சரிவை காண்பதால் அந்த நாள் முடியும் வரை தூறல் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

  • 12 மணி முதல் 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் போட்டி தொடங்குவதே தாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

  • நாள் முழுவதும் அவ்வப்போது போட்டியை குறுக்கிடும் வகையில் லேசான மழை பெய்யலாம்.

  • போட்டி நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான வானிலை நிலவரம் தொடர்ந்து எதிர்மறையாக வந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் தற்போதுதான் மோதவிருந்தன.


ரசிகர்கள் சோகம்:


கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மட்டும்தான் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதனால், அரிதாகவே நடைபெறும் இந்த போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் ஆர்வமாக இருப்பார்கள்.




இந்த நிலையில், உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் மோதும் இந்த போட்டியை காண ஆர்வமாக உள்ள ரசிகர்கள் நாளைய போட்டி மழையால் பாதிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவதால், மிகுந்த கவலையில் உள்ளனர்.


மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும் குறுகிய ஓவர் வடிவமான டி20 முறையிலாவது ஆட்டம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாளைய போட்டி 50 ஓவர்கள் இரு அணிகளிலும் முழுமையாக நடக்குமா? பாதியிலே மழை குறுக்கிடுமா? டக்வொர்த் லீவிஸ் விதிக்கு செல்லுமா? 20 ஓவர் போட்டியாக நடக்குமா? அல்லது போட்டி முற்றிலும் கைவிடப்படுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது. ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும்.