ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஐ.பி.எல் கோப்பைகளை பெற்றுள்ளது. இந்த முறையும் தோனி தலைமையிலான சென்னை அணி 6 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் இறங்க உள்ளது. கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக ஹஸ்ஸி மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் இந்த 17 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ள முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
சிறந்த 3 வெளிநாட்டு நட்சத்திரங்கள்:
ரச்சின் ரவீந்திரா:
நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா. இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பையின் மூலம் பிரபலமானவர். 10 போட்டிகளில் 64.22 சராசரியிலும், 106.44 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 578 ரன்களை எடுத்ததன் மூலம் நான்காவது அதிக ரன் அடித்தவர் ஆனார். 24 வயதான இவரை 1.8 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
சமீபத்தில் நியூசிலாந்து டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்த அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 240 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அரைசதம் அடித்தார்.
ரச்சின் ரவீந்திரா மொத்தம் 56 டி20 போட்டிகளில் விளையாடி 16.41 சராசரியில் 673 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது இடது கை சுழற்பந்து வீச்சில் 41 சராசரியில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் 2024ல் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் முதன்முறையாக விளையாட உள்ள இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மொயின் அலி:
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் மொயின் அலி. இதுவரை மொத்தம் 319 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 24.73 சராசரி மற்றும் 140.68 ஸ்ட்ரைக் ரேட்டில் 6283 ரன்கள் எடுத்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி 25.20 சராசரியில் 212 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த சூழலில் அந்த அளவிற்கு சிறப்பாக இவர் விளையாடவில்லை. அதேநேரம், கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் மொயின் அலி இந்த முறை எப்படியும் அணியின் வெற்றிக்கு உதவுவார் என்பது எதிர்பர்ப்பாக இருக்கிறது.
டேரில் மிட்செல்:
ஐபிஎல் 2024 ஏலத்தில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டார். கடைசியாக 2022ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த முறை சென்னை அணிக்காக இவர் விளையாட இருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டேரில் மிட்செல் 2023 உலகக் கோப்பையில் ஐந்தாவது அதிக ரன் எடுத்த வீரர். 10 போட்டிகளில் 69 சராசரி மற்றும் 111.06 ஸ்ட்ரைக் ரேட்டில் 552 ரன்கள் எடுத்தார்.
195 டி20 போட்டிகளில் 31.48 சராசரியிலும் 135.29 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 4251 ரன்கள் எடுத்துள்ளார். 23.65 சராசரியில் 76 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இல்லாத நிலையில் மிட்செல் அவருக்கு மாற்றாக பார்க்கப்படுகிறார். மிடில் ஓவர்களில் சிஎஸ்கேக்கு முக்கியாமன பேட்டராக இருப்பார்.
CSK வெளிநாட்டு வீரர்கள் IPL 2024:
டெவோன் கான்வே, மொயீன் அலி, மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரன், டேரில் மிட்செல், முஸ்தபிசுர் ரஹ்மான்
சிஎஸ்கே ஐபிஎல் 2024 அணி:
எம்.எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், சிமர்ஜீத் சிங், சிமர்ஜீத் சோலங்கி நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அவினாஷ் ராவ் ஆரவெல்லி
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!