இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பை வகிப்பவர் சேத்தன் சர்மா. இவர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்குள் நடக்கும் பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் இப்போது பி.சி.சி.ஐ. வட்டாரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்று சேத்தன் சர்மாவிடம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இந்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். விராட்கோலி கடந்த 2021ம் ஆண்டு இந்திய அணிக்கு மூன்று வடிவ போட்டிகளிலும் கேப்டனாக இருந்தார். ஆனால், அந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு தனது கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதேசமயம் பி.சி.சி.ஐ. அவரை ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோகித் - கங்குலி - விராட்கோலி:
இந்த சம்பவம் தொடர்பாக சேத்தன் சர்மா அளித்துள்ள கூறியிருப்பதாவது, “ ரோகித்சர்மாவுக்கு ஆதரவாக கங்குலி இல்லை. அதேசமயம், கங்குலிக்கு விராட்கோலியை சுத்தமாக பிடிக்கவில்லை. பி.சி.சி.ஐ. தலைவரால் (கங்குலி) தனது கேப்டன்சி பறிக்கப்படுவதை விராட்கோலி உணர்ந்தார். தேர்வுக்குழுவினர் 9 பேர் கங்குலி ஆகியோர் வீடியோ கான்ப்ரன்சில் இருந்தோம். அப்போது, கங்குலி ஒரு முறை யோசித்து பாருங்கள் என்றார். ஆனால், அதை கோலி கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.
விராட்கோலிக்கும், ரோகித்சர்மாவுக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை. ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே ஈகோ உள்ளது. இவர்கள் இருவரும் அமிதாப்பச்சன் மற்றும் தர்மேந்திரா போன்று இரு பெரிய நட்சத்திரங்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி:
மேலும், சேத்தன் சர்மா தன்னுடைய பேட்டியில் ஹர்திக்பாண்ட்யா, உமேஷ் யாதவ் மற்றும் தீபக்ஹூடா ஆகியோர் தன்னுடைய வீட்டிற்கு வந்து தங்கள் எதிர்காலம் பற்றி ஆலோசித்தனர் என்றும் கூறியுள்ளார். விராட்கோலி, ரோகித்சர்மா இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ளனர். சவ்ரவ் கங்குலி 2000ம் ஆண்டுகளில் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற கேப்டன் ஆவார்.
இந்த நிலையில், இந்த மூன்று பேர் குறித்து சேத்தன் சர்மா அளித்துள்ள பேட்டியால் இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. விராட்கோலி தலைமையில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வெற்றி சதவீதத்தை வைத்திருந்தாலும், அவரது தலைமையில் இந்திய அணி ஐ,சி.சி.யின் சர்வதேச கோப்பைகள் எதையும் கைப்பற்றாதது பி.சி.சி.ஐ.யிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை விராட்கோலி ராஜினாமா செய்தார். ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து அவரை பி.சி.சி.ஐ. நீக்கியது. ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பொறுப்பையும் விராட்கோலி 2021ம் ஆண்டு ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: WPL 2023: அதிரடியாக வெளியான அட்டவணை.. மார்ச் 4-ஆம் தேதி முதல் போட்டி.. யார் யாருக்கு தெரியுமா..? முழு விவரம்!
மேலும் படிக்க: Pujara Test Record: 100வது டெஸ்டில் இந்திய அணிக்காக களம்.. இதுவரை புஜாராவின் சாதனைகளும், கடந்து வந்த பாதைகளும்!