உலகக்கோப்பைக்கு முன்பு நடடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்கும் தொடராக இருக்கும் என்று எதிர்பார்த்தால், இந்திய அணிக்கு பாடம் புகட்டும் தொடராக அமைந்து வருகிறது.


பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியிலே களமிறங்கிய இந்திய அணி ஷாகின், நசீம் ஷா, ஹாரிஸ் ராப் பந்துவீச்சில் தடுமாறினர். அவர்களது உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என்பது எதிர்பார்த்ததே. ஆனால், மழை காரணமாக அந்த போட்டியில் இந்தியா பந்துவீச வாய்ப்பு கிட்டவில்லை.


ஃபீல்டிங்கில் கோட்டை:


இந்த நிலையில், நேபாள அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதைக்கண்ட இந்திய ரசிகர்கள் அனைவரும் நேபாளத்தை குறைந்த ரன்னிலே சுருட்டி இந்தியா ஆட்டத்தை வேகமாக முடித்துவிடும் என்றே எண்ணியிருப்பார்கள். ஆனால், போட்டியில் நடந்து கொண்டிருப்பது என்னவோ வேறாக உள்ளது.




ஆட்டத்தை தொடங்கிய நேபாள தொடக்க வீரர்கள் இந்திய பந்துவீச்சைக் கண்டு துளியளவும் பயம் இல்லாமல் ஆட்டத்தை தொடங்கினார்கள். அவர்களது ஆட்டத்திற்கு ஏற்றாற்போ இந்திய ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர், விராட்கோலி, இஷான்கிஷான் ஆகியோர் கைக்கு வந்த கேட்ச்சையே கோட்டை விட்டனர்.


அசத்தலாக ஆடிய நேபாளம்:


இந்திய ஃபீல்டிங் நேபாள அணிக்கு சாதகமாக குஷல் புர்டெல் – ஆசிப் ஜோடி சற்றும் பயமின்றி அடித்து ஆடியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சில சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் மிக அசால்டாக அடித்தனர். குறிப்பாக, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜின் பந்துவீச்சில் பவுண்டரியையும், சிக்ஸரையும் குஷால் புர்டெல் பறக்கவிட்டார்.


அவர்களது பேட்டிங்கை மேலும் உத்வேகப்படுத்தும் விதமாக மைதானத்தில் கூடியிருந்த நேபாள ரசிகர்கள் நேபாள்… நேபாள் என்று உற்சாகப்படுத்தினர். முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா என யார் வீசினாலும் மிக அற்புதமாக அவர்கள் எதிர்கொண்டனர். கடைசியில்  ஷர்துல் தாக்கூர் பந்தில் அதிரடி காட்டிய குஷல் புர்டெல் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.


பந்துவீச்சில் பலவீனம்:


பவர்ப்ளேவான முதல் 10 ஓவர்களில் நேபாள அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 65 ரன்களை எடுத்தது. நேபாள அணியின் பேட்டிங் தரத்துடன் ஒப்பிடும்போது இந்திய அணியின் பந்துவீச்சு என்பது மிக மிக பலம் வாய்ந்தது. ஆனால், இந்த போட்டியை பார்க்கும்போது இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையில் அல்லாமல் நாம் என்ற தலைக்கணத்துடனும், நேபாளம்தானே என்ற ஏளனத்துடனும் ஆடுவது போல தெரிகிறது. அதன் விளைவே, முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 65 ரன்களை எடுத்துள்ளனர்.




இந்திய அணியின் பவுலிங்கில் சிறு, சிறு பலவீனம் இருந்தாலும் நேபாளம் போன்ற சிறிய அணியுடன் விக்கெட் எடுக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வருவது ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு மிகப்பெரிய அணியுடன் ஆடுவது போன்ற எந்தவித மன அச்சமும் இல்லாமல், இந்திய அணியை அவர்கள் அணுகும் அணுகுமுறையும், அவர்கள் பந்தை அடித்து ஆடும் தன்னம்பிக்கையும் ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாகவே அமைந்துள்ளது.


பயிற்சி இன்னும் அவசியம்:


முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் போன்ற பந்துவீச்சாளர்களை முன்னோக்கி வந்து இறங்கி வந்து ஆடியது அவர்களது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. முதன்முறையாக இந்திய அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்ற பதற்றம் இல்லாமல் இளங்கன்று பயமறியாது என்பது போல மிக சிறப்பாக நேபாளம் ஆடி வருகின்றனர்.


உலகக்கோப்பைக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சை கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும் என்பதையே நேபாளம் அணி இந்த போட்டியில் கற்றுக்கொடுத்துள்ளது.


மேலும் படிக்க: Asia Cup 2023 LIVE: அடுத்தடுத்து கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்ட இந்திய வீரர்கள்; சுதாரித்து ஆடும் நேபாளம்..!


மேலும் படிக்க:India vs Left Arm Pacers: இடது கை வேகப்பந்துவீச்சுக்கு தடுமாறும் இந்தியா.. உலகக்கோப்பைக்கு முன்பு உடனடி தீர்வு கிடைக்குமா?