ஆசியக் கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் இந்த ஆண்டு தொடரை நடத்துகின்றன. இதில் இந்த இரண்டு நாடுகளுடன் இந்தியா, நேபாளம், வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் களமிறங்கியுள்ளன. இதில் குரூப் ஏ மற்றும் குரூப் பி என ஒரு குழுவிற்கு 3 அணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.


இந்தியா - நேபாளம்:


இந்த நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியுள்ள இந்த போட்டி, கண்டி மைதானத்தில் தொடங்கியுள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். எனவே வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால், ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணி நிலவரம்:


பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டி உள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் அரைசதம் விளாசிய இஷான் கிஷான், பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ரா, சிராஜ் மற்றும் தாக்கூர் ஆகியோருடன் குல்தீப் யாதவ் என வலுவான லைன் - அப்பை இந்தியா கொண்டிருப்பது உத்வேகம் அளிக்கிறது.


நேபாளம் அணி:


ஆசியக்கோப்பை தொடரில் நேபாளம் அணி களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் படுதோல்வி சந்தித்தது. போதிய அனுபவமில்லாத நேபாளம் அணி இந்தியாவை எதிர்கொண்டு வெல்வது சிரமம்தான்.


மைதானம் எப்படி?


பல்லேகல சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இயற்கையில் மிகவும் சமச்சீரான ஆடுகளமாக திகழ்கிறது. சுழற்பந்துவீச்சாளர்கள் டர்ன் மற்றும் பவுன்ஸ் காரணமாக கூடுதல் உதவி பெறலாம். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யும் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்கலாம். 


வானிலை அறிக்கை:


மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் போது மழை பெய்ய 80 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் எச்சரித்துள்ளன. ஒருவேளை போட்டி மழையால் மீண்டும் கைவிடப்பட்டால், இந்திய அணி நேரடியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.