ஆசியக் கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. இதில் பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து இந்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துகின்றன. இதில் இந்த இரண்டு நாடுகளுடன் இந்தியா, நேபாளம், வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் களமிறங்கியுள்ளன. இதில் குரூப் ஏ மற்றும் குரூப் பி என ஒரு குழுவிற்கு 3 அணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.


இந்தியா - நேபாளம்:


இந்த நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியுள்ள இந்த போட்டி, கண்டி மைதானத்தில் தொடங்கியுள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். எனவே வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால், ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. 


டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்ததால், நேபாளம் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குஷால் மற்றும் ஆசிஃப் ஷேக் நிதானமாக ஆடினர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜின் முயற்சிகளை இந்திய அணியினர் வீணடித்தனர். 


3 கேட்ச் மிஸ்


போட்டியின் முதல் ஓவரினை வீசிய முகமது ஷமி  பந்தை எதிர்கொண்ட குஷால் அடித்த பந்து ஸ்ரேயர்ஸ் ஐயர் கைகளுக்கு எளிதாக வந்தது. ஆனால் அதனை அவர் மிஸ் செய்தார். அதேபோல் அடுத்த ஓவரில் சிராஜ் வீசிய பந்தினை எதிர்கொண்ட ஆசிஃப் ஷேக் பந்தை தூக்கி அடிக்க அது விராட் கோலி கரங்களுக்குச் சென்றது. அனைவரும் விராட் அதனை பிடித்து விட்டார் என நினைத்தனர். ஆனால் அவர் அந்த கேட்சை நழுவ விட்டார். அதேபோல், போட்டியின், 4வது ஓவரினை ஷமி வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் குஷால் எளிதாக கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பராக இருந்த இஷான் கிஷன் பிடிக்க முயற்சி செய்ய மெதுவாக நகர்ந்தார். ஆனால் அதற்குள் பந்து அவரைக் கடந்து விட்டதால் இந்த கேட்ச் வாய்ப்பும் வீணானது. பவர் ப்ளேவில் இந்திய அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதால் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.