உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் இந்திய அணி முதன்மையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், முன்னணி வீரர்களின் காயம், உடற்தகுதி, அணியில் இருந்து அடிக்கடி காயத்தால் விலகுவது என்பது போன்ற காரணங்களால் அணியே ஒரு நிலையற்ற தன்மையை சமீபகாலமாக கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியில் புதிய பிரச்சினை ஒன்று தற்போது உருவாகியுள்ளது.


இடது கை வேகப்பந்துவீச்சு vs இந்தியா:


தற்போது நடைபெற்று வரும் ஆசியக்கோப்பையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானாலும் அந்த போட்டியில் இருந்து இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய என்பது வெட்ட வெளிச்சமானது. அதாவது, இயல்பாகவே பாகிஸ்தான் அணி பலமான பந்துவீச்சை கொண்ட அணியாகவே எப்போது திகழ்ந்தாலும் சமீபகாலமாக அவர்களது பந்துவீச்சு திறன் அபாரமாகவே உள்ளது.




ஆனால், பிரச்சினை என்னவென்றால் ரோகித்சர்மா, விராட்கோலி போன்ற ஜாம்பவான்களுடன் சுப்மன்கில், ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, இஷான்கிஷன், ஜடேஜா என மிகப்பெரிய பேட்டிங் லைன் அப்பை  இந்தியா கொண்டிருந்தாலும் இவ்வளவு பெரிய பேட்டிங் லைன் அப்பும் இடது கை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுகிறது என்பதுதான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மூலம் தெரிய வந்துள்ளது.


கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி ஷாகின் அப்ரிடியிடம் ஸ்டம்பை பறிகொடுத்தனர். தற்போதைய பாகிஸ்தான் அணியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர் ஷாகின் அப்ரிடி ஆவார். புதிய பந்தில் அவரது வேகமும், லைன் மற்றும் லென்த்தும் இந்திய வீரர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. கடந்த போட்டியில் சுப்மன்கில் தடவி, தடவி ஆடியது அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.




இந்திய அணி இதற்கு முன்பு இடது கை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் ஒன்றும் இல்லை. ஷாகின் அப்ரிடியை விட ஜாம்பவானான வாசிம் அக்ரமையே எதிர்கொண்டுள்ளனர். ஆனால், சமீபகாலத்தில் இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணம் இந்திய அணியில் தரமான இடது கை வேகப்பந்துவீச்சு இல்லாததே ஆகும். உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்திய அணியைத் தவிர மற்ற அணிகளில் பெரும்பாலும் தரமான இடது கை வேகப்பந்துவீச்சாளரை  வைத்துள்ளனர்.


இந்தியாவில் மட்டும் மிஸ்:


கடந்த போட்டியில் ஷாகின் அப்ரிடி 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் மட்டுமின்றி வலதுகை வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷாவும் வெறும் 8.5 ஓவர்கள் மட்டுமே வீசி 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பாகிஸ்தானில் ஷாகின் அப்ரிடி, நியூசிலாந்தில் போல்ட், ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க் என முன்னணி அணிகளில் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் பரூக்கி, வங்கதேசத்தில் முஸ்தபிசூர் ரஹ்மான், வெஸ்ட் இண்டீசில் காட்ரெல், அயர்லாந்தில் லிட்டில் உள்ளனர். இப்படி ஒவ்வொரு அணியும் ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரை தங்கள் வசம் வைத்துள்ளனர்.


ஆனால், இந்திய அணியில் ஜாகிர்கான், நெஹ்ராவிற்கு பிறகு தரமான இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை. 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இந்த 2 இடது கை வேகப்பந்துவீச்சாளர்களும் இருந்தனர். குறிப்பாக அரையிறுதியில் நெஹ்ராவின் பந்துவீச்சில் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.




ஆனால், அவர்களுக்கு பிறகு இந்திய அணி நிர்வாகம் இடது கை வேகப்பந்துவீச்சை உருவாக்க தவறிவிட்டது என்றே சொல்லலாம். நடராஜன் நன்றாக வளர்ந்து வந்த சூழலில், காயத்தால் அவர் அணியில் இடம்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அர்ஷ்தீப்சிங் தொடர்ச்சியாக ஆடினாலும் அவரிடம் நிலைத்தன்மை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


பேட்டிங் ஆர்டர்:


வலது கை வேகப்பந்துவீச்சில் மட்டுமே இந்திய அணியினரும் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவதால் இடது கை வேகப்பந்துவீச்சில் மிகவும் தடுமாறி வருகின்றனர் என்பதும் முக்கிய காரணம் ஆகும், ஷாகின் அப்ரிடியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டால் நிச்சயம் அவரது பந்துவீச்சை திறம்பட சமாளிக்கலாம் என்பதே உண்மை. அதேசமயம் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை இடது கை பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளிக்கின்றனர் என்பதும் உண்மை. அதனால்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இஷான்கிஷான் அபாரமாக ஆடினார். 




ஆட்டத்தை தொடங்கும் ஜோடியும் வலது - இடது என்று அமைவதும் கூடுதல் பலமாகும். அதற்கு சச்சின் - கங்குலி, சச்சின் - கம்பீர், ரோகித் - தவான், சேவாக் - கம்பீர் ஆகிய ஜோடிகள் சிறந்த உதாரணம் ஆகும். இந்திய அணியில் மீண்டும் அப்படி ஒரு காம்பினேஷனை கொண்டு வர வேண்டியதும் அவசியம் என்பதையும் இது  உணர்த்துகிறது. ஷாகின் அப்ரிடி இந்திய அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் அவருக்கு எதிராக இடது கை பேட்ஸ்மேனை இந்திய அணி தொடக்க வீரராக பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சு பிரச்சினையையும், ஷார்ட் பிட்ச் பந்துவீச்சில் தடுமாறும் பிரச்சினையையும் ராகுல் டிராவிட் சரி செய்யாவிட்டால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்பதே உண்மை ஆகும்.