டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் 13 வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இங்கிலாந்தை வென்ற ஆப்கானிஸ்தான்:
இந்த போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. முன்னதாக கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்ததாக கடந்த 11 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது. இச்சூழலில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்த தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய தனது அணி வீரர்களை பாரட்டியுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி.
சிறந்த வெற்றி:
இது தொடர்பாக பேசிய அவர், “இந்த வெற்றியின் மூலம் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வெற்றிக்கு பிறகு எங்கள் அணி வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வெற்றி எங்கள் அணிக்கு கிடைத்த சிறந்த வெற்றி என்றே நான் கூறுவேன். நான் தற்போது எங்கள் அணியின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன்.
இந்த வெற்றியின் மூலம் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு நிறைய கிரிடிட் கிடைக்கும். அவர்கள் தங்களது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
கலக்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ்:
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து எங்கள் அணியில் விக்கெட்டுகள் விழுந்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் இந்த போட்டியில் நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கையில் தான் நான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அவர் என்னுடைய நம்பிக்கையை ஏமாற்றவில்லை. ” என்று கூறினார்.
தொடர்து பேசிய அவர், “ கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நேற்றைய வெற்றி எங்களுக்கு முதல் வெற்றி. கடைசி அல்ல. நாங்கள் இன்னும் வெற்றிக்காக காத்திருக்கிறோம்.
முஜீப் உர் ரஹ்மான்:
அதேபோல் முக்கியமான நேரத்தில் எங்கள் அணி வீரர் முஜீப் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவர் 16 பந்துகளில் 26 ரன்களை அணிக்காக எடுத்து கொடுத்தார். அதேபோல் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இது இந்த வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. ” என்று அணியின் வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, உலகக் கோப்பையின் முதல் வெற்றியை சுவைத்துள்ள ஆப்கானிஸ்தான் அணி வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Cricket In Worldcup: இந்திய ரசிகர்கள் உற்சாகம்..! 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்ப்பு
மேலும் படிக்க: AUS Vs SL Score LIVE: சரிந்த டாப் ஆர்டர்; தடுமாறும் இலங்கை; பந்து வீச்சில் மிரட்டும் ஆஸ்திரேலியா