உலகக் கோப்பை 2023ல் இதுவரை 13 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது. ஒரு சில அணிகள் மட்டும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன.
விளையாடப்பட்ட இந்த 13 போட்டிகளுக்கு பிறகு, அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தநிலையில், உலகக் கோப்பையில் இதுவரை சிறந்த 10 புள்ளிவிவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்..
- அதிக ரன்கள்: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இதுவரை மூன்று இன்னிங்ஸுகள் விளையாடி 248 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் டெவோன் கான்வே 229 ரன்களுடன் 2வது இடத்திலும், ரோகித் சர்மா 217 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
- அதிக விக்கெட்டுகள்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2023 உலகக் கோப்பை போட்டியில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து வீரர்களான மிட்செல் சான்ட்னர் (8), மேட் ஹென்றி (8) ஆகியோர் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.
- சிறந்த இன்னிங்ஸ்: இங்கிலாந்துக்கு எதிராக 147 பந்துகளில் 152 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் டெவோன் கான்வேயின் இன்னிங்ஸ்தான், இந்த உலகக் கோப்பையின் சிறந்த மற்றும் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆகும்.
- அதிகபட்ச சராசரி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் இந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச சராசரியை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவர் 3 போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்கள் விளையாடி, அதில் ஒருமுறை ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக தற்போது உலகக் கோப்பையில் அவரது பேட்டிங் சராசரியும் 137 ஆக உள்ளது.
- அதிக ஸ்ட்ரைக் ரேட்: இந்த உலகக் கோப்பையில் இலங்கையின் குசல் மெண்டிஸ் இதுவரை 119 பந்துகளில் 198 ரன்கள் எடுத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 166.38 ஆக உள்ளது.
- அதிக சிக்ஸர்கள்: 2023 உலகக் கோப்பையில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் குசல் மெண்டிஸ் பெயரே முதலிடத்தில் உள்ளது. இதுவரை மெண்டிஸ் 14 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
- சிறந்த பந்துவீச்சு இன்னிங்ஸ்: நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் நெதர்லாந்துக்கு எதிராக 10 ஓவர்களில் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த உலகக் கோப்பையின் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது.
- சிறந்த பொருளாதார விகிதம்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். அவரது எகானமி விகிதம் ஓவருக்கு 3.4 ரன்கள் மட்டுமே.
- சிறந்த பந்துவீச்சு சராசரி: இந்த உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு சராசரி 11.62. அதாவது, பும்ரா தனது பந்துவீச்சில் விட்டுகொடுத்த ஒவ்வொரு 12 ரன்களுக்கும் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.
- டாப் பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்: வங்கதேசத்தின் மெஹ்தி ஹசன் 8 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது அவர் ஒவ்வொரு 12 வது பந்திலும் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.
தற்போது இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்பு இருந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டே இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது.