2028ம் ஆண்டு உலகக் கோப்பையில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வாக்கெடுப்பில் 2 பேர் எதிர்ப்பு தெரிவிக்க, ஒருவர் மட்டும் வாக்களிப்பதில் இருந்து விலகினார். மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிகில், கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை கிரிக்கெட் போட்டி டி-20 வடிவில் நடைபெற உள்ளது.






மற்ற விளையாட்டுகள் என்ன?


லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் முன்மொழிவு திட்டத்தில் ஐந்து புதிய விளையாட்டுகளை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வு ஏற்றுக்கொண்டது. அதன்படி, பேஸ்பால்/சாஃப்ட்பால், கிரிக்கெட் (டி20), பிளாக் ஃபுட்பால், லாக்ரோஸ் (சிக்ஸர்கள்) மற்றும் ஸ்குவாஷ் ஆகிய 5 விளையாட்டுகள் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரம், குத்துச்சண்டை போட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 






இந்திய ரசிகர்கள் உற்சாகம்:


ஒலிம்பிக்கில் பேஸ்பால்/சாஃப்ட்பால், கிரிக்கெட் மற்றும் லாக்ரோஸ் ஆகியவை ஏற்கனவே விளையாடப்பட்ட நிலையில்,  தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.  அதே நேரத்தில் பிளாக் ஃபுட்பால் மற்றும் ஸ்குவாஷ் ஆகியவை முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகமாக உள்ளன.  உலகின் மிகப்பெரிய இரண்டாவது விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதோடு, சர்வதேச அளவிலான போட்டியில் இந்திய அணி தொடர்ந்து கோலோச்சி வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்தியா தங்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.