மயிலாடுதுறையில் காவிரியை மையமாக வைத்து ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீராடி ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. இதேபோன்று சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள்.
சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பதும் ஐதீகம்.
இதனை முன்னிட்டு ஐப்பசி மாதம் 10 நாட்களும் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு துலா உற்ச்சவம் காவிரி வடகரை தென்கரைகளில் உள்ள சிவாலயங்களில் கடந்த 7 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பஞ்சமூர்த்திகள் காவிரிகரைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்ச்சவமாக நடைபெற்று வருகிறது.
Pattathu Arasan: முத்தையா பாணியில் சற்குணம்... 'பட்டத்து அரசன்' போஸ்டரை வெளியிட்ட லைகா!
ஶ்ரீவிசாலாட்சி அம்பாள் உடனுரை ஶ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் துலா உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வெளிமண்டபத்தில் சுவாமி அம்பாள் பஞ்சமூர்திகளுடன் எழுந்தருள செய்யப்பட்டது. அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஹோமங்கள் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு பட்டுகள் சாத்தப்பட்டு 16 வகையான சோடஷ தீபாரதனை மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.