'சண்டிவீரன்' திரைப்படம் மூலம் இணைந்த நடிகர் அதர்வா முரளி - இயக்குனர் சற்குணம் ஜோடி இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.


 



இரண்டாம் முறையாக ஜோடி சேரும் இயக்குனர் - நடிகர் :


நடிகர் விமல் மற்றும் ஓவியா நடிப்பில் நல்ல வரவேற்பு பெற்ற 'களவாணி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சற்குணம். இவர் களவாணி 2, டோரா, சண்டிவீரன், வாகை சூட வா, நய்யாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். நடிகர் அதர்வா முரளி நடிப்பில் சண்டிவீரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சற்குணம் இரண்டாம் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஜெயபிரகாஷ், ஆர்.கே. சுரேஷ், பாலா சரவணன் மற்றும் சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்கள் லோகநாதன் மற்றும் ராஜா. 


 







டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் :


அதர்வா முரளி - ராஜ்கிரண் காம்போவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ' பட்டத்து அரசன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின்  டைட்டில் அறிவிப்பை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இது ஒரு கிராமிய பின்னணி கொண்ட திரைப்படமாக இருக்கும் என்பது போஸ்டர் மூலம் அறியப்படுகிறது. அதனால் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பகுதிகளை சுற்றி நடைபெற்றது என கூறப்படுகிறது.


 






 


தேசிய விருது பெற்ற இயக்குனர் :


இயக்குனர் சற்குணத்தின் 'வாகை சூட வா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. களவாணி திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் களவாணி 2 , நையாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. கிராமங்களை மையாக வைத்து திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் சற்குணத்திற்கு இந்த 'பட்டத்து அரசன்' திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். 


முத்தையா படங்களில் வரும் கதாபாத்திரங்களைப் போன்று பட்டத்து அரசன் படத்தின் போஸ்டர் உள்ளதாக தெரிகிறது. விருமன், கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை போன்ற மாதிரியாக இது இருக்கலாம் என போஸ்டரை வைத்து யூகிக்க முடிகிறது.