பழனி தைப்பூச எட்டாம் நாள் திருவிழாவான இன்று கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முருக பக்தர்களுடன் சேர்ந்து ஆட்டம் ஆடி வெளிநாட்டவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 5 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11ம் தேதி நேற்று மாலை நடைபெற்றது. ஊர்க்கோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை சமேதராக தேர்ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30மணியளவில் துவங்கிய தேரோட்டம் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர்.
வள்ளி தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அரசு அதிகாரிகள், பழனிநகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகிற 14 ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றதையடுத்து, தைப்பூசத் திருவிழாவில் ஒன்றை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பஞ்சாமிர்தம் வாங்கி செல்வது வழக்கம். இதற்காக பழனி அறநிலைய துறை சார்பில் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் பழனி முழுவதும் கிளைகள் பல இடங்களில் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தைப்பூச திரு நாளன்று நேற்று கூட்டம் அதிகமான காரணத்தினால் முறையான ஏற்பாடு செய்யாததால் பழனி அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பலர் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் வாங்காமல் அருகில் உள்ள தனியார் கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.
இன்று தைப்பூச விழா எட்டாவது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழா தேரோட்டம் முடிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து பழனிக்கு வந்துள்ள முருக பக்தர்கள் மலையடிவாரத்தில் காவடிகளை சுமந்து கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்றைய தினம் மலைக் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கட்டணமில்லாமல் அனைவரும் தரிசனம் செய்து சென்று வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மலை மீது செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து விரைவாக சாமி தரிசனம் செய்ய போலீசார் மற்றும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளனர். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கும்பமேளாவில் பங்கேற்க வந்தவர்கள். இவர்கள், பழனி தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட முருக பக்தர்களுடன் சேர்ந்து ஆட்டம் ஆடி வெளிநாட்டவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.