தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதமாக தை மாதம் விளங்கி வருகிறது. தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அல்லது அந்த தினத்தையொட்டி உள்ள பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.



முத்துமலை முருகன் கோவில்:


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூர் பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்துமாலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகன் சிலை 146 அடியில் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். தைப்பூசத்தை முன்னிட்டு முத்துமலை முருகன் கோவிலில் உள்ள மூலவர் வள்ளி தெய்வானையுடன் ராஜ அலங்காரம் காட்சியளித்தார். மேலும், இன்று மாலை தங்கத்தேர் பவனி உலா நடைபெற உள்ளது. முத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். 



காவடி பழனி ஆண்டவர் திருக்கோவில்:


சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் சேலம் உருக்கு ஆலை செல்லும் வழியில் அமைந்துள்ள காவடி பழனியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நடனமாடி வந்தனர். பின்னர் பழனி ஆண்டவர் திருக்கோவிலில் பால முருகர் தங்கக் கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார். இந்த கோவிலில் மாலை கோவிலை சுற்றி தங்க தேர் பவனி உலா நடைபெற உள்ளது. 


கந்தாஸ்ரமம் திருக்கோவில்:


சேலம் மாநகர பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள மலைக்கோவில்களில் ஒன்றான கந்தாஸ்ரமம் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகர் கந்த குருவாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார். இந்தக் கோவிலின் கூடுதல் சிறப்பாக பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உள்ளது. தைப்பூசத் திருநாளையொட்டி மலை மீது அமைந்துள்ள கந்த குரு முருகனை வழிபட்டு செல்கின்றனர்.



சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்:


சேலம் மாநகர் அம்மாபேட்டை அமைந்துள்ள செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


குமரகிரி தண்டாயுதபாணி கோவில்:


சேலம் மாநகர பகுதியில் மலை மீது அமைந்துள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவிலில் முருகர் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள இடத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார். தைப்பூசம் நாளை முன்னிட்டு குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.