TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay DMK BJP: தேர்தல் வியூக அமைப்புடன் இணைந்து செயல்படும் தவெக தலைவர் விஜயின் திட்டத்தை, திமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் விமர்சித்துள்ளன.

TVK Vijay DMK BJP: தேர்தல் வியூக அமைப்புடன் இணைந்து செயல்பட்ட திமுக மற்றும் பாஜகவின் வரலாற்றை குறிப்பிட்டு தவெகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் - பிரசாந்த் கிஷோர் கூட்டணி:
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியது முதலே, 2026 சட்டமன்ற தேர்தலை தான் விஜய் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். அதற்கேற்பவே அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்து வருகிறது. இந்நிலையில் தான், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை, விஜய் அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில், தமிழ்நாட்டில் விஜயின் தவெகவிற்கு உள்ள வாக்கு வங்கி, தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும்? கூட்டணி உள்ளிட்டவை குறித்த, தனது திட்டங்களை பிரசாந்த் கிஷோர் விளக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடமும், தொலைபேசி வாயிலாக பேசி கூட்டணி குறித்து ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் மீது குவியும் விமர்சனங்கள்:
பிரசாந்த் கிஷோர் உடனான விஜயின் சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளியானதில் இருந்தே, அவரது தவெக கட்சியின் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை குவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய திமுக அமைச்சர் சேகர்பாபு, “ தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
பொங்கி எழுந்த அண்ணாமலை
விஜய் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “மக்களை சந்தித்தால் அவர்கள் பிரச்சனையைச் சொல்வார்கள். அதுதான் அரசியல். ஏ.சி ரூமில் உட்கார்ந்து கொண்டு தேர்தல் வியூக நிபுணர்களை உட்கார வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்பது என்ன அரசியல்? மக்களை சந்தியுங்கள், தெருவில் நில்லுங்கள், மக்கள் ஒவ்வொருவரும் அரசியல் வியூகவாதிகள் தான். மக்களைச் சந்திக்காமல் ஒவ்வொரு தலைவரும் தேர்தல் வியூக நிபுணரை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்தால், வரும் காலத்தில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். எல்லோரும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு பொலிடிக்கல் கன்சல்டண்டை வைத்து அரசியல் செய்து விட முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழச மறந்துட்டீங்களா?
திமுக மற்றும் அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு தவெகவினர், பழைய வரலாற்றின் மூலம் பதிலடி கொடுப்பதோடு, பழச மறந்துட்டீங்களா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி, பிரசாந்த் கிஷோர் முதன் முதலில் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்ததே இப்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு தான். 2011ம் ஆண்டு குஜராத் தேர்தலின்போது, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பின்பற்றியதன் மூலம் தான், மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநில முதலமைச்சரானார். அதைதொடர்ந்து 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போதும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் முன்னெடுத்த பரப்புரை தான் பாஜகவின் அபார வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இதையெல்லாம் மறந்துவிட்டு தான், அண்ணாமலை இன்று பேசி வருகிறார் என தவெகவ்னர் சாடி வருகின்றனர்.
திமுகவிற்கு இன்றைக்கு கசக்குதா?
மறுபுறம், எங்களுக்கு மக்களுடன் தான் கூட்டணி என பேசும் திமுக, 2021ம் ஆண்டு எதற்கு பிரசாந்த் கிஷோரிடம் கோடிகளை கொட்டி ஒப்பந்தம் மேற்கொண்டது எனவும் தவெகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். கெட்டப்பை மாற்றி, ”ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போராரு” என புகார் பெட்டியை ஊர் ஊராக தூக்கிச் சென்றதெல்லாம் மறந்துவிட்டதா? எனவும் சாடி வருகின்றனர். அதோடு, அன்று பிரசாந்த் கிஷோரின் கீழ் செயல்பட்ட தேர்தல் வியூக குழுவை தான், இன்று ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ”PEN” என்ற பெயரில் நடத்தி திமுகவிற்கு ஆதரவான பரப்புரையை நடத்தி வருவதாகவும் தவெகவினர் தக்க பதிலடி தந்த வண்னம் உள்ளனர்.