ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும், நவராத்திரி நாட்களிலும் செய்யப்படும் மிகவும் முக்கியமான பூஜை சுமங்கலி பூஜை ஆகும். திருமணமான பெண்கள் தங்களது கணவனின் ஆயுட்காலம் நீடிக்க வேண்டும் எனவும், தங்களது மாங்கல்யம் பலம் பெற வேண்டும் எனவும், தங்கள் குடும்பம் செழிப்புடன் வாழ வேண்டும் எனவும் செய்யும் பூஜையே சுமங்கலி பூஜை என்பது நம்பிக்கை
இந்த நிலையில், சுமங்கலி பூஜையை எப்படி செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கம் இருக்கும். இந்த கட்டுரையில் அதை தெளிவாக காணலாம்.
சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள். இந்த சுவாஷினி என்பதே சுமங்கலி என்று அழைக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் மட்டுமின்றி திருமணம் ஆகாத பெண்களுக்கும் சுமங்கலி பூஜை மிகுந்த பலன் தருவதாக அமைகிறது. இதன்மூலம், திருமணம் ஆகாத பெண்களுக்கும் விரைவில் திருமண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை
எந்த நாளில் செய்ய வேண்டும்?
சுமங்கலி பூஜையானது பெரும்பாலும் திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களில் செய்வதே சிறந்தது ஆகும். இந்த நாட்களில் நல்ல நேரம் பார்த்து பூஜை செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை
செய்வது எப்படி?
நமது வீடுகளில் சுமங்கலி பூஜை செய்ய வேண்டுமென்றால் நமது வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். வீட்டின் வாசல்களில் மாவிலைகளால் மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.
வீட்டின் பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு பூக்கள் வைத்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். சுமங்கலி பூஜைக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்களை அழைப்பது என்பது வழக்கம். 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்களை அழைக்க வேண்டும்.
சுமங்கலி பூஜையில் பங்கேற்க வரும் பெண்களுக்கு நல்ல முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். குங்குமம், சந்தனம், மலர்கள் அளித்து அவர்களை பூஜையில் மரியாதையுடன் அமர வைக்க வேண்டும். பின்பு, முறைப்படி அம்பாளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம்பப்படுகிறது
பிரசாதம்:
சுமங்கலி பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு அந்த பூஜையை நடத்தும் வீட்டார் தங்களது வசதிக்கு ஏற்ப விருந்துக்கு ஏற்பாடு செய்வார்கள். நல்ல வசதியானவர்கள் சுமங்கலி பூஜையில் பங்கேற்றவர்களுக்கு அறுசுவை உணவு அளிப்பார்கள். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலத்தில் மருதாணி, தேங்காய், கண்ணாடி, சீப்பு, பழங்கள், ஜாக்கெட், புடவை ஆகியவற்றையும் வைத்து பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு அளிப்பார்கள்.
சிலர் சுமங்கலி பூஜையில் பங்கேற்றவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து தாம்பூலம் கொடுப்பார்கள்.
சுமங்கலி பூஜை செய்வது மூலம் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பது மட்டுமின்றி, வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி வீட்டில் செல்வ செழிப்போடு வளமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.
மேலும் படிக்க: Aadi Krithigai: இன்னும் திருமணமாகவில்லையா? கவலைப்படாதீங்க.. இன்றே உகந்தநாள்...! இதை செய்யுங்க
மேலும் படிக்க: ஆடி கடைசி வெள்ளி... நன்மைகளை வாரி அருளும் இருக்கன்குடி மாரியம்மன்..! குவியும் பக்தர்கள்..!