தமிழ் நாட்டில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி என்ற சிற்றூரில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, அம்மனை தரிசித்து வழிபடுவதால், நம் அனைத்து வினைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.




இரு கங்கை குடி:


அர்ஜுனனாலும், ராமராலும் உருவாக்கப்பட்டதால், இந்த இரண்டு நதிகளும் கங்கைக்கு நிகரான புண்ணியத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த ஊருக்கு ‘இருகங்கை குடி’ என்ற பெயர் உருவானது. அந்தப் பெயரே காலப்போக்கில் மருவி தற்போது இருக்கன்குடி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.




அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீரி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது.இதன் மூலம் அந்த மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். தன் கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, பிரதிஷ்டை செய்தார் சித்தர்.




மாரியம்மன் சிலை:


ஆனால் இந்த சிலை இயற்கை சீற்றத்தினால் ஆற்று மண்ணில் புதைந்து போனது. சில காலங்கள் கடந்த பிறகு, இந்த இடத்திற்கு ஒரு சிறுமி சாணம் சேகரிக்க தினம்தோறும் வருவாள். ஒரு நாள் அவள் தரையில் வைத்த சாணக் கூடையை தூக்க முடியவில்லை. அந்தக் கூடையை தூங்குவதற்காக ஊர் மக்களின் உதவியை நாடினாள் அந்த சிறுமி. ஊர் மக்கள் அனைவராலும் தூக்கப்பட்ட கூடையின் அடியில் காட்சி தந்தாள் அம்பாள். இவ்வாறு இருக்கன்குடி மாரியம்மனின் சிலையானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு அருள் பாவித்து வருகின்றாள் அம்பாள்.இங்கே அம்மன் வலக் காலை மடித்து, இடக் காலை தொங்கவிட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.





மாரியம்மன் இங்கே சிவ அம்சமாகத் திகழ்வதால், அம்மன் சந்நிதிக்கு எதிரில் நந்தி இருக்கிறது. இப்போது கோயில் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது. இங்கே அம்மனின் திருவுருவத்துக்கு பதில், அம்பிகையின் திருவடிவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே உற்சவ அம்மன் பிரதான கோயிலுக்கு எழுந்தருளுகிறாள்.




குழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வருகின்றனர்.




செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் அக்னிச் சட்டி எடுத்தல், அங்கபிரதட்சிணம் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.கண்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.