கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரங்களில் கார்த்திகை, திதிகளில் சஷ்டி என முருகனை வழிபட இவை மிகவும் உகந்த நாள். குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி விரதமும், திருமணம் ஆகாதவர்கள் கார்த்திகை நட்சத்திரத்திலும், செவ்வாய் தோசம் இருப்பவர்கள் செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிப்பட்டால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அதிலும் ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகும். முருகனுக்கென்றே அர்பணிக்கப்பட்ட நாள் என்றும் கூறலாம். 2023 ஆம் ஆண்டுக்கான ஆடி கிருத்திகை(Aadi Krithigai) இன்று (ஆகஸ்ட் 9 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது.





முருகப்பெருமான் பிறந்தது விசாக நட்சத்திரத்தில் என்றாலும் கார்த்திகை பெண்கள் முருகனை வளர்த்த காரணத்தால் அவர்களை போற்றும் வகையில் கார்த்திகை நட்சத்திரமும் முருகனுக்கு உகந்ததாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கிய ஆடி கிருத்திகை நாளை காலை 7.30 மணி வரை இருக்கிறது. இந்நாளில் பக்தர்கள் முருகனுக்கு விரதம் இருந்து வழிப்படுவார்கள், அப்படி வழிப்பட்டால் திருமண தடை நீங்கும் என்றும் வீடு மனை, சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என ஐதீகம்.


ஆடி கிருத்திகை அன்று முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்படும். கார்த்திகை விரதம் இருப்பவர்கள் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறப்பானதாகும். திருமணம் ஆகாதவர்கள் ஆடி கிருத்திகை நாளில் திருப்புகழில் உள்ள பாடலை பாராயணம் செய்து வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கூடி வரும் என கூறப்படுகிறது.




திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முருகனுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோயிலுக்கு ஆடி கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோயிலில் இருக்கும் 365 படிகள் ஏறி சாமி தரிசன்ம் செய்வார்கள். ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


வீட்டில் இருப்பவர்கள் காலையில் குளித்துவிட்டு முருகனுக்கு நெய்வேதியம் வைத்து வழிபடுவார்கள். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் உப்பில்லாமல் உணவை உட்கொண்டால் மிகவும் நல்லது என கூறுகின்றனர். சண்முகர் என்றும் அழைக்கப்படும் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு, பால், பஞ்சாம்ருதம் மற்றும் அரிசி ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. பக்தர்கள் விரதம் இருக்க முடியவில்லை என்றால், இன்று முருகன் கோயிலில் விளக்கு ஏற்றினால் கூட போதுமானது. இதை மட்டும் செய்தால் நீங்கள் நினைத்தெல்லாம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதை எதையுமே செய்ய முடியவில்லை என்றால் கூட மனதளவில் முருகனை நினைத்து வழிப்பட்டாலே அந்த முருகனின் அனுகிரகம் கிடைக்கும் என்கின்றனர். ஆடி கிருத்தை மட்டுமல்லாமல், வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், சஷ்டி ஆகிய நாட்கள் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும்.