சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக பிரமோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட திருத்தேரோட்டம் நடைபெற்றது.
விநோத வழிபாடுகள்
தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் விநோத வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் கறி விருந்து, பட்டைசோறு சாப்பிடுதல், வெள்ளை சேலை கட்டி பொங்கல் வைத்தல், செவ்வாய் பொங்கல், முள் படுக்கையில் அருள்வாக்கு சொல்லுதல் உள்ளிட்ட பலவகையான விநோத வழிபாட்டு முறைகள் உள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிரபலமான சேவுகப் பெருமாள் கோயிலில் தேர் திருவிழாவின் போது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். இந்த தேங்காய்களை உடைத்துக் கொண்டிருக்கும் போது பக்தர்கள் சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு தேங்காய்களை சேகரித்து செல்வார்கள். இந்தாண்டு இந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட கோயிலாகும் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசி விசாக பிரமோற்சவ பெருந் திருவிழா கடந்த மே 12- ஆம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி இரவு சுவாமி திருவீதி உலாவும் ஐந்தாம் நாள் திருக்கல்யாண வைபவமும் ஆறாம் நாள் இரவில் கழுவன் திருவிழாவும் நடைபெற்றது.
தேர் திருவிழா
அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாளான நேற்று மாலை ஸ்ரீ விநாயகரும் சிங்கம்பிடாரி அம்மனும் தனித்தனியா இரண்டு சப்பரத்திலும் பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ சேவுகப் பெருமாள் அய்யனார் பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சந்திவீரன் கூடம் பகுதியில் இருந்து புறப்பட்ட நாட்டார்கள் மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு தேரடியில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் நாட்டார்கள் வடம் பிடித்து தேரை இழுக்கத் துவங்கினர். தொடர்ந்து தேரோட்டத்தை காண புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் சிங்கம்புணரி அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் என இலட்சக்கணக்கானோர் தேரோட்டத்தை காணக் கூடினர். புறப்பட்ட தேர்கள் நான்கு ரதவீதிகளிலும் வந்து நிலையை வந்து சேர்ந்தது.
தேங்காய் உடைப்பு
காத்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் காணிக்கைகளை தேங்காய்களாக தேரடி நிலை படிகளில் எறிந்து உடைக்கத் துவங்கினர். இந்த பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் தங்களது நேர்த்திகடனாக 101 ,201 , 501 , என பக்தர்கள் சுமார் 2 இலட்சம் தேங்காய்களை உடைத்து வழிபாடு செய்தனர். தேங்காய்கள் உடைக்கும் சப்தம் சுமார் இரண்டு மணிநேரம் தேரடி படிகளில் எதிரொலித்தது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழகத்தில் அதிகரிக்கும் மழை: ஆர்.பி உதயகுமார் வைக்கும் முக்கிய கோரிக்கை!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..