Adulteration in Watermelon: தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால், அதை எளிதில் கண்டறிவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


தர்பூசணியில் கலப்படம்:


கோடை வெயில் உச்சம் தொட்டம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பொதுமக்கள், பல்வேறு பழங்களை உண்பதில் கவனம் செலுத்தியுள்ளனர். அதில் தர்பூசணிக்கு மிக இடம் உண்டு. இந்த சூழலை பயன்படுத்தி சந்தையில் பலர், கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணிகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.


இதனை உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI),  நுகர்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு, ஒரு வீடியோவைப் பகிர்ந்து, கலப்படம் செய்யப்பட்ட அல்லது போலியான தர்பூசணிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.



கலப்படத்தை கண்டறிவது எப்படி?


இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட பரிந்துரையின்படி,  தர்பூசணியில் உள்ள கலப்படத்தை ஒரு எளிய பருத்தி துண்டின் மூலம் சரிபார்க்கலாம். தர்பூசணியை பாதியாக வெட்டி, பழத்தின் சிவப்பு கூழ் மீது பருத்தி துண்டை தேய்க்கவும். கலப்படம் செய்யப்பட்டு இருந்தால், பருத்தி துண்டு சிவப்பு நிறமாக மாறும்.


அதனடிப்படையில், அந்த தர்பூசணியில் எரித்ரோசின் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம். பல சமூகவலைதள பயனர்கள் FSSAI-பரிந்துரைக்கப்பட்ட முறையை முயற்சித்த பிறகு, தாங்கள் கண்ட அதிர்ச்சியூட்டும் முடிவைப் பகிர்ந்துள்ளனர்.


இது தர்பூசணியை விரும்பி உண்ணும் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


எரித்ரோசைன் பாதிப்புகள் என்ன?


எரித்ரோசைன் எனப்படும் ஆபத்தான செயற்கை நிறமூட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், குழந்தை பருவத்தில் பிள்ளைகளின் நடவடிக்கையில் மாற்றம் மற்றும் தைராய்ட் செயல்பாடு போன்ற முக்கிய சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என பல மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.