கோடை வெயிலுக்கு பின் மழை

 


கடந்த இரண்டு மாதங்களாக கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டது.  மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வந்தது. மதுரை மாவட்டத்திலும் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. மதுரையில் பல மாதங்களாக போதிய மழை பெய்யாமல் இருந்ததால், பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் தற்போது கோடையில் கடுமையான வெயிலுக்கு பின் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்காமலும், தேங்கிய மழை நீரை அகற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

 

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது..,” மதுரை மாவட்டம் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கடைசி இரண்டு வாரம் கத்திரி வெயில் பொதுமக்கள் பகல் நேரத்திலும், வெளியே நடமாட முடியாத நிலையும், இரவில் கடும் புழுக்கமும், பகலில் வெயிலில் கொடுமையாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெயில் பாதிப்பால் பொதுமக்களுக்கு ஹிட் ஸ்டோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. 

 

மதுரை கனமழை

 

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது, நேற்று பிற்பகல் இடி மின்னலுடன் நகர் முழுவதும் பலத்த மழை பெய்தது, இதனால் பல இடங்களில் சாலைகளை தெரியாத அளவிற்கு மழை நீர் சூழ்ந்தது, பள்ளமாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது ,பல இடங்களில் பல அடி தூரத்திற்கு தண்ணீர் தேங்கியதால அதில் சென்ற இரண்டு சக்கர வாகனங்கள் பழுதடைந்தன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால், மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மீனாட்சி அம்மன் கோவில், மாசி வீதிகளும், வெளிவீதிகளும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர், ஒவ்வொரு மழையின் போதும் சாலைகளில் மழைநீர் தேங்குவதும், மக்கள் சிரமப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.

 

போக்குவரத்து முடங்கி நெரிசல்

 

 

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற சாலைகளை கணக்கெடுத்து, மழைநீர் சுலபமாக வழிந்தோட தீர்வு காண வேண்டும். ஆனால் உரிய நடவடிக்கை இல்லாததால், சில மணி நேரம் மழைக்கே மதுரை நகர் தாக்குப் பிடிக்காத முடியாமல், போக்குவரத்து முடங்கி நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தியது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருக்கவும் ,தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்றிடவும், தடையில்லாத, சிரமமில்லாத, பாதுகாப்பான போக்குவரத்திற்கும் தேவையான நடவடிக்கு எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கடிதத்தில் கூறியுள்ளார்.