தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப் பெருமானுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்று பங்குனி உத்திரம். பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், உத்திரநட்சத்திரமும் இணைந்து ஒரே நாளில் வருவதுதான் பங்குனி உத்திரம் ஆகும்.


நடப்பாண்டிற்கான பங்குனி உத்திரம் வரும் மார்ச் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் வரும் பங்குனி நட்சத்திரம் அபூர்வமான பங்குனி உத்திரம் ஆகும். அப்படி என்னென்ன சிறப்பு ஆகும்.


தனிச்சிறப்பு:


தமிழ் மாதங்களில் வரும் பங்குனி மாதம் கடைசி மாதம் ஆகும். அதாவது 12வது மாதம் ஆகும். 12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இணைவதும் பங்குனி உத்திரம் எனப்படுகிறது. இதில் தனிச்சிறப்பு என்னவென்றால், நடப்பாண்டிற்கான பங்குனி உத்திரம் வரும் பங்குனி 12ம் தேதியே வருகிறது.


அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு 12ம் எண் என்பது மிகவும் உகந்தது ஆகும். பன்னிரு கை கொண்ட கார்த்திகேயன் என்று முருகனை பாடுவதை நாம் கேட்டிருப்போம். இதனால், பங்குனி உத்திரம் 12ம் தேதி வருவதும் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.


இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும், பங்குனி உத்திரமான வரும் மார்ச் 25ம் தேதியே வருகிறது. இதுவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திர கிரகமாணது வரும் மார்ச் 25ம் தேதி காலை 10.23 முதல் காலை 3.02 மணி வரை வருகிறது. பங்குனி உத்திரத்தில் வரும் சந்திர கிரகண நேரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் ஏராளமான நன்மைகளை அடையலாம் என்பது ஐதீகம் ஆகும்.


அனைத்திற்கும் ஆதியாக கருதப்படும் சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் திங்கள்கிழமை ஆகும். இதை சோமவாரம் என்றும் கூறுவார்கள். சிவபெருமானுக்கு உரிய சோமவார தினத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுவதும் தனிச்சிறப்பு ஆகும். பங்குனி உத்திரம் நாளில் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வணங்கினால் கவலைகள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.


குவியும் பக்தர்கள்:


பங்குனி உத்திரம் நன்னாளான வரும் 25ம் தேதி அதிகாலையிலே எழுந்து குளித்துவிட்டு, விரதம் இருக்க முடிந்தவர்களால் விரதம் இருக்கலாம். காலையிலே வீட்டில் உரிய வழிபாடு செய்ய வேண்டும். முதல் நாளே வீட்டை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உடல்நலக்குறைவு இருப்பவர்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.


கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் சிறப்பு வழிபாடு, பூஜையில் பங்கேற்கலாம். இதன்மூலம் கவலைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். பங்குனி உத்திர தினத்தில் முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 


மேலும் படிக்க: Panguni Uthiram 2024: முதல் நாள் பிறக்கும் திதி! அடுத்த நாள் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம்! ஏன்?


மேலும் படிக்க: Tiruchanur Maha Lakshmi: கோடீஸ்வரனாக்கும் திருச்சானூர் மகாலட்சுமி வழிபாடு.. எந்த நாளில் வணங்க வேண்டும் ?