தமிழ் மாதங்களில் கடைசி மாதமும், 12வது மாதமாக இருப்பது பங்குனி. பங்குனி மாதத்தில் வரும் நாட்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது பங்குனி உத்திரம் ஆகும். பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியே பங்குனி உத்திரம் ஆகும். 12வது மாதமான பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணைவதும் அதே நாளில் பங்குனி உத்திரம்(Panguni Uthiram) ஆகும்.


பங்குனி உத்திரம் எப்போது? | Panguni Uthiram 2024 Date and Time


நடப்பாண்டிற்கான பங்குனி உத்திரம் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பலருக்கும் பங்குனி உத்திரம் மார்ச் 24ம் தேதியா? மார்ச் 25ம் தேதியா? என்ற குழப்பம் உள்ளது. அதற்கு காரணம் என்னவென்று கீழே தெளிவாக காணலாம். மார்ச் 24ம் தேதி ( வரும் ஞாயிற்றுக்கிழமை) காலை 8.46 மணிக்கு உத்திர நட்சத்திரமும், காலை 11.17 மணிக்கே பௌர்ணமி திதியும் தொடங்குகிறது.


பௌர்ணமி திதி வரும் 25ம் தேதி ( திங்கள்கிழமை) பகல் 1.16 மணி வரையும், உத்திர நட்சத்திரம் 25ம் தேதி காலை 11.19 மணி வரை உள்ளது. இதனால், பக்தர்கள் பலருக்கும் பங்குனி உத்திரம் மார்ச் 24ம் தேதியா? மார்ச் 25ம் தேதியா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.


பௌர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் 24ம் தேதியே பிறப்பதால் அன்றைய தினம் பங்குனி உத்திரமாக இல்லாமல் 25ம் தேதி ஏன் கொண்டாடப்படுகிறது? என்ற கேள்வி எழலாம். பஞ்சாங்கத்தின்படி, ஒரு நாளில் சூரியன் உதயமாகும்போது எந்த திதியும், நட்சத்திரமும் உள்ளதோ அதே திதியும், நட்சத்திரமும்தான் அன்றைய தினம் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். இதன் காரணமாகவே, 25ம் தேதி பங்குனி உத்திரமாக கணக்கில் கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது.


களைகட்டும் முருகன் கோயில்கள்:


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது. பல கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏற்கனவே கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கிவிட்டது. முருகன் கோயில்கள் மட்டுமின்றி அம்மன் கோயில்கள், சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் பங்குனி உத்திரம் சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அறுபடை கோயில்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட லட்சக்கணக்கில் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Guru Peyarchi Palangal 2024: குரு பெயர்ச்சி 2024 : மகுடம் சூடப்போகும் 4 ராசிகள் எது..? என்ன பலன்கள்..?


மேலும் படிக்க: Panguni Rasipalan: "மேஷம் முதல் மீனம் வரை" பங்குனி மாத ராசிபலன்கள் இதோ!