ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம். ஆடி அமாவாசையை முன்னிட்டு புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம்.
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்:
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் ஏராளமானோர் படை எடுத்து வழிபாடு செய்வார்கள்.
அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.
மக்கள் குறைவு:
இந்த சூழலில் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் காவிரி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் ஆடி அமாவாசையான இன்று அதிகாலை முதல் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்தாண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் எந்த அமாவாசையில் தர்ப்பணம் வழிபாடு மேற்கொள்வது என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது. அதன் காரணமாக கடந்த அமாவாசையை வழிபாடு செய்தவர்கள் போக மீதம் சிலர் ஆடி அமாவாசை வழிபாட்டில் ஈடுபட்டதை அடுத்து பூம்புகார், காவிரி துலாக்கட்டம் உள்ளிட புண்ணிய நீர்நிலைகளில் பொதுமக்களின் கூட்டம் எப்போதும் இல்லாத அளவாக குறைந்தது காணப்படுகிறது.