ஆடி அமாவாசை தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டு வருகின்றனர். 


ஆடி அமாவாசை:


இந்துக்களின் முக்கிய விரத நாளான அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இதில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசையானது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது. அதாவது ஆடி 1 (ஜூலை 17) அன்று முதல் அமாவாசை வந்தது.


ஆடி 31 ஆம் தேதியான (ஆகஸ்ட் 16) இன்று 2வது அமாவாசை வருகிறது. இப்படி ஒரு மாதத்தில், ஜென்ம நட்சத்திரம் இரண்டு தினங்கள் வந்தால் 2வது நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கருத வேண்டும். அதன்படி இன்றைய நாளில் நாம் முன்னோர்களை வழிபட வேண்டும். அமாவாசை திதி நேற்று (ஆகஸ்ட் 15)  மதியம் 12.42 மணிக்கு தொடங்கி இன்று மதியம் 3.07 வரை மட்டுமே உள்ளது. சூரிய உதயம் அடிப்படையில் இன்று ஆடி அமாவாசை தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை தினமான இன்று பித்ரு தோஷ பரிகாரங்களை காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும்


முன்னோர்களுக்கு திதி:


இந்த நாளில் நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும். மேலும் அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னாதானம் போன்றவை செய்தால்  பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.இதனைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் முன்னோர்கள் படங்களுக்கு மாலை அணிவித்து (துளசி மாலை அணிந்தால் கூடுதல் சிறப்பு), அவர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும்.


நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கி, அருகிலிலுள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்தாலே போதுமானது. இதேபோல் மாதம் ஒருமுறை வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டாலே போதும்.  பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதோடு இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும்.


இன்றைய நாளில் அதிகாலை முதலே பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இன்று சிறப்பு வாய்ந்த நாள் என்பதால் ராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் பல மாநில மக்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்துள்ளனர்.