காஞ்சிபுரம் அருள்மிகு அன்னை ரேணுகாம்பாள் ஆலய 48வது ஆண்டு ஆடி பெருவிழாவை ஒட்டி 108 பால்குடம் ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

 

ஆடி மாதம் என்றாலே அம்மன் ( Renugambal Amman Temple ) 

 

காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவிலில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் திருவிழாக்கள் கலை கட்டுவது வழக்கம். குறிப்பாக, ஆடி மாதத்தை பொறுத்தவரை சிறு தெய்வங்கள் வழிபாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆடி மாதம்,  நிறைவடைய உள்ள நிலையில்,  பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.



 

அருள்மிகு அன்னை ரேணுகாம்பாள் ஆலயம்

 

அந்தவகையில், கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில்,  செங்குந்தர் பூவரசு தோப்பு பகுதியில், அருள்மிகு அன்னை ரேணுகாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத் திருக்கோயிலின் 48 - வது ஆண்டு ஆடிப்  பெருவிழா கடந்த 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள் தோறும் சொற்பொழிவு பரதநாட்டியம் சொல் அரங்கம் பட்டிமன்றம் பக்தி பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளும் இரவு நேரங்களில் நடைபெற்றது.



 

ஆடி மாத பெருவிழா

 

இது மட்டுமில்லாமல் நாள்தோறும் அம்மனுக்கு மீனாட்சி,  பர்வதவர்த்தணி,  சொர்ணலட்சுமி,  நாகாத்தம்மன்,  தாய் மூகாம்பிகை,  வராகி,  புற்றுமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 



 

108 பால்குட அபிஷேகம்

 

அவ்வகையில் இன்று 108 பால்குட ஏந்திய பெண் பக்தர்கள்  காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து மேளதாளம் , பேண்ட் வாத்தியங்கள்  முழங்க திருக்குடைகள் உடன் புறப்பட்டு , பல்வேறு வீதிகள் வழியாக அருள்மிகு அன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தை அடைந்ததனர். வரும் வழியில் பம்பை உடுக்கை உள்ளிட்ட வாக்கியங்கள் வாசிக்கப்பட்டது. பால்குடம் எடுத்து வந்த ஏராளமான பெண்கள், அம்மன் அருள் வந்து ஆடி அருள் வாக்கு அடித்தனர். பால்குடம் ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க , காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.



 

அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம்

 

இதனைத் தொடர்ந்து பெண்கள் வரிசையாக  பால்குடம் கொடுத்து அளித்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மேற்கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் உள்பட 600 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் , குங்கும பிரசாதங்களும், அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த 10 தினங்களாக நடைபெற்று வரும் 48 - வது ஆடி திருவிழாவை, நிர்வாகிகளும் விழா குழுவினரும் சிறப்பாக மேற்கொண்டு வந்தனர். இதேபோன்று இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காஞ்சிபுரத்தில் பல்வேறு அம்மன் கோவில்களில் பொங்கல் வைக்கும் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.