மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கோடங்குடியில் கிராம மக்களால் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு வீர காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோடங்குடியில் கிராம மக்களால் தங்கள் பகுதியில் புதிதாக அருள்மிகு வீர காளியம்மன் கோயில் கட்டி வழிபாடு செய்ய முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பங்களிப்புடன் கோயில் கட்டும் பணியினை தொடங்கி நடைபெற்று வந்தது. சிற்பம், கோபுரம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது. அதனை அடுத்து கும்பாபிஷேகத்திற்கான நாள் முடிவு செய்து, கும்பாபிஷேகம் பணிகளை தொடங்கினர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது.
தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மஹாபூர்ணாஹூதி செய்யப்பட்டு மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது.
அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத புனித நீர் கோபுர கலத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்